யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த பரிசுத் தொகுப்பு கடந்த மார்ச் 11ஆம் தேதி வழங்கப்பட்டதாகும். ஆனால், சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 15 அன்று தான் அறிவிக்கப்பட்டது.
பரவிய செய்தி
ராமநாதபுரத்தில் பறக்கும் படை பறந்து பறந்து வேலை பார்த்த போது எடுத்த வீடியோ. பச்சையா இருக்குடா இதெல்லாம், எதுக்குடா எலக்சன் நடத்துறீங்க @ECISVEEP திமுக தான் வெற்றி னு அறிவிச்சுருங்க.

விரிவான விளக்கம்
சமையல் பாத்திரங்கள், கரண்டி ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை திமுகவைச் சேர்ந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கொடுத்திருப்பதாக ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, ‘திமுகவினர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போதே வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுத் தொகுப்புகளை கொடுக்கிறார்கள்’ என்று பரப்புகிறார்.
ராமநாதபுரத்தில் பறக்கும் படை பறந்து பறந்து வேலை பார்த்த போது எடுத்த வீடியோ.
பச்சையா இருக்குடா இதெல்லாம், எதுக்குடா 😡எலக்சன் நடத்துறீங்க @ECISVEEP திமுக தான் வெற்றி னு அறிவிச்சுருங்க. pic.twitter.com/lyhGy6FXUv
உண்மை என்ன?
காதர்பாட்சா முத்துராமலிங்கம் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு ஏதும் வழங்கியிருக்கிறாரா? என்று இணையத்தில் தேடினோம்.
இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்களைக் காணமுடிந்தது. அதில் மார்ச் 11ஆம் தேதி, இராமநாதபுரம் திருப்புல்லாணியில் நடைபெற்ற திமுக பிரமுகர்கள் மற்றும் முகவர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் புகைப்படங்களையும் காணமுடிகிறது.

ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 15 அன்று தான் வெளியிடப்பட்டது. அதாவது, 15-03-2026 அன்று மாலை தான் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்; மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதிலிருந்து, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திமுக முகவர்களுக்கு பரிசுத்தொகுப்பு கொடுத்த போது தேர்தல் நடத்தை விதிகள் அமலிலே இல்லை. மேலும் தொகுதி மக்களுக்கு கொடுக்கவில்லை கட்சி முகவர்களுக்கு தான் கொடுத்திருக்கிறார்.
முடிவு:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னர் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது என்பதை மறைத்து, தேர்தல் நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கியதாக தவறாக பரப்புகிறார்கள்.