யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2013ஆம் ஆண்டின் இறுதி வரையில் கூட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்தது.
பரவிய செய்தி
’2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியின் போது பெரும் பிரச்சினையாக இருந்த மின்வெட்டை, 2011ல் ஆட்சியமைத்த 6 மாதங்களில் சரி செய்தார் ஜெயலலிதா’

விரிவான விளக்கம்
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல மணிநேரம் மின்வெட்டு செய்யப்படும் நிலை இருந்தது. இது அப்போதைய திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய கரும்புள்ளியாக இருந்தது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்த மின்வெட்டு பிரச்சினையை வெறும் 6 மாதங்களில் சரி செய்வேன் என்று கூறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததாகவும், அவ்வாறே அந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் சொன்னது போலவே 6 மாதங்களில் மின்வெட்டு பிரச்சினையை ஜெயலலிதா அரசு முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், ஜெயலலிதா நல்ல நிர்வாக ஆளுமையாக இருந்தார் என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அட்மினிஸ்டரேஷன் பவர்னா நான் கண்டிப்பா ஜெயலலிதா அவர்களைத் தான் சொல்வேன்.
அதுக்கு உதாரணம்.
2006 - 2011 கலைஞர் அவர்களின் ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது.
எங்கள் ஊரில் எல்லாம் பகலில் 1 மணி நேரம், இரவில் 2 மணி நேரம் தான் கரண்ட் வரும்.
அப்போதைய மின்துறை அமைச்சர்… https://t.co/6K5m6LWble
உண்மை என்ன?
2011ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றது. அதன் பின்னர், தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை இருந்ததா என்பது குறித்த தகவல்களை இணையத்தில் தேடினோம்.
முதலில் 2013 நவம்பர் மாதம் ’தினமலர்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், மின்வெட்டு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து முறையிடலாம் என்று கோவையில் நடந்த தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக் கமிட்டியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், சென்னை தவிர தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் தினசரி 8 முதல் 10 மணிநேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறும்’ என்று 2013 அக்டோபர் மாதம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்ததற்கு மாறாக, அந்த ஆண்டு திபாவளிக்கு பின்னர் கோவையில் 8 மணிநேரமும் பிற மாவட்டங்களில் 10 மணிநேரத்திற்கும் அதிகமாகவும் மின்வெட்டு அமலில் இருந்ததாகவும் தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டுக் கமிட்டியின் தலைவர் பாலசுந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், 2013 நவம்பர் மாதம் ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், தலைநகர் சென்னையைத் தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2013ஆம் ஆண்டின் இறுதி வரையில் கூட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்ததை தெரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
2011ல் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் ஜெயலலிதா தமிழ்நாட்டில் மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.