யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மலைக் கோவில் ஒன்றில் பூஜை செய்யும் போது பூசாரி ஒருவர் கால் இடறி விழுந்து இறந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
ஆந்திராவில் 49 வயது சாமியார் ஒருவர் தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாகக் கூறி, பக்தர்கள் முன்னிலையில் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரிழப்பு

விரிவான விளக்கம்
பக்தர்கள் சூழ்ந்திருக்க மலை உச்சியில் பூஜை செய்து கொண்டிருக்கும் பூசாரி ஒருவர் கீழே விழும் வீடியோவை கொண்டு, ‘சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாகக் கூறி, பக்தர்கள் முன்னிலையில் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரிழந்தார்’ என்று ’News தமிழ்’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
News Tamil 24x7 News Update | மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்
ஆந்திராவில் 49 வயது சாமியார் ஒருவர் தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாகக் கூறி, பக்தர்கள் முன்னிலையில் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரிழப்பு
இந்தத் துயரச் சம்பவம், மூடநம்பிக்கை மற்றும் எவ்வித அறிவியல் அடிப்படையுமின்றி… pic.twitter.com/TEtCrCpkVA
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’THE TIMES OF INDIA’ ஆங்கில செய்தித்தளத்தில் இந்த வீடியோவுடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ‘ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ப மல்லய்யா சுவாமி மலைக் கோவிலில் பாப்பையா என்ற 49 வயதுள்ள பூசாரி பூஜை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்துவிட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கையில் மணியும் இன்னொரு கையில் தீபத் தட்டையும் கொண்டு பூஜை செய்து கொண்டிருந்த போது அந்த பூசாரி கால் இடறி 40 அடி ஆழத்தில் விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் இதுகுறித்து தேடியபோது, இதே செய்தியை ‘ANI’ ஆங்கில செய்தித்தளமும் வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, அந்த பூசாரி தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாக கூறி மலையில் இருந்து குதிக்கவில்லை, மாறாக பூஜை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும் இந்த சம்பவம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, சமீபத்தில் நடந்ததல்ல என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மலைக் கோவில் ஒன்றில் பூஜை செய்யும் போது பூசாரி ஒருவர் கால் இடறி விழுந்து இறந்த சம்பத்தை, சமீபத்தில் பூசாரி தனக்கு பறக்கும் சக்தி இருப்பதாக கூறி மலையில் இருந்து குதித்து இறந்ததாக தவறான செய்தியை தமிழ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.