யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவ்வாறு பரவி வரும் செய்திகள் அறிவியல் ஆதாரமற்றவை. மேலும் வீடியோவில் பல பலன்களும் வரிசையாக கூறப்பட்டுள்ளன. எனவே சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மருத்துவர் அறிவுரையின்றி பீட்ருட் ஜூஸ்களை பருகவேண்டாம்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Mix watermelon with lemon pic.twitter.com/b90AR61XFD
உண்மை என்ன?
முதலில் பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேடி பார்த்தோம். அப்போது webmd. com இணையதளத்தில், “Health Benefits of Beetroot” என்ற தலைப்பில் பீட்ரூட் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் யார் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளது என்றும், இது சிறுநீரக கற்கள் ஏற்பட வழிவகுக்கும் எனவும், மேலும் இது மூட்டுவலிக்கும் வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடி பார்த்த போது, Times of India ஊடகத்தில் "Love beets, but worried about kidney health? Here's how you you can reduce oxalates and prevent kidney stone risk" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பீட்ரூட்டில் ஊட்டச்சத்து, நார்சத்து, இரும்புசத்து, பொட்டாசியம் மற்றும் உணவு நைட்ரேட்டுகள் நிறைந்தவை என்றும், அவை ஆரோக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பீட்ரூட்டில் உள்ள அதிக ஆக்சலேட் உள்ளடக்கம், சிறுநீரக கற்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், ஆக்சலேட் அளவைக் கணிசமாகக் குறைக்க பீட்ரூட்டை வேகவைத்தல் நல்லது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Times of India ஊடகத்தில், ஜூன் 19 அன்று "Kidney health alert: Why that glass of beetroot juice might be doing more harm than good" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகிருந்தது. பீட்ரூட் சாறில், அதிக ஆக்சலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆக்சலேட்டுகள் உடலில் கால்சியத்துடன் பிணைக்கப்படும்போது, அவை சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். குறிப்பாக சிறுநீரக கற்கள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, இதை உணவில் சேர்ப்பதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது மிக முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

atlantic urologyclinics. com இணையதளப்பக்கத்தில் இது குறித்து கூறப்பட்டிருந்தது. அதில் பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகளும் நிறைந்துள்ளன. ஆக்சலேட் என்பது பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே காணப்படும் ஒரு கலவை ஆகும். சில பழங்கள் மற்றும் காய்கறிகள் இதை உற்பத்தி செய்து கால்சியம் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இது அவற்றின் வளர்ச்சிக்கு அவசியமானது. இருப்பினும், மனிதர்களுக்கு, அதிகப்படியான ஆக்சலேட்டை உட்கொள்வது, சிலருக்கு சிறுநீரக கற்களை உருவாக்கும் என்ற குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மருத்துவர் பிரவீனிடம் யூடர்ன் தரப்பில் இருந்து ஆய்வு செய்ததில், பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக இருப்பதால், அது சிறுநீரக கற்கள் ஏற்பட வழிவகுக்கும் என்பது உண்மையே என உறுதி செய்துள்ளார்.
முடிவு:
நம் தேடலில், பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக இருப்பதால், இது சிறுநீரக கற்கள் ஏற்பட வழிவகுக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் பீட்ரூட்டைத் தவிர்க்க வேண்டும் அல்லது எப்போதாவது மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆராய்ச்சிகளில் சொல்லப்பட்டுள்ளது.எனவே பீட்ரூட், எலுமிச்சைசாறு, தர்பூசணிப் பழம் கலந்த பழச்சாறை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என பரவி வரும் செய்திகள் அறிவியல் ஆதாரமற்றவை.
