யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Fancy எண் பெறுவதற்கான கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தும் வகையில் வரைவு திருத்தத்தை அரசிதழாக வெளியிட்டுள்ளது தவெக அரசு.
பரவிய செய்தி
Fancy Number-ஐ ஒரு பைசா கூட செலவில்லாமல் வழங்குகிறது தவெக அரசு... கடந்த ஆட்சியில் அதற்காக ₹7,000 முதல் ₹15,000 வரை செலவாகியது.
விரிவான விளக்கம்
புதிய வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் பதிவு எண் வழங்கப்படும். இதில் சிலர் தங்களுக்கு விரும்பமான எண்ணை (Fancy Number) பதிவு எண்ணாக வழங்கவேண்டும் என்று முன்பதிவு செய்து பெறுவார்கள். இவ்வாறு Fancy எண்ணை வாகனப் பதிவு எண்ணாக முன்பதிவு செய்து பெற குறிப்பிட்ட அளவில் கட்டணம் செலுத்தவேண்டும்..
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சி வரையில் இந்த Fancy எண்ணை பெற ரூபாய். 7,000 முதல் 15,000 வரை கட்டண வாங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தவெக ஆட்சியில் கட்டணமே இல்லாமல் வாகனங்களுக்கான Fancy எண் வழங்கப்படுவதாகவும் பரப்பப்படுகிறது.
Fancy Number-ஐ ஒரு பைசா கூட செலவில்லாமல் வழங்குகிறது தவெக அரசு... கடந்த ஆட்சியில் அதற்காக ₹7,000 முதல் ₹15,000 வரை செலவாகியது. pic.twitter.com/VVkYnRa7Fi
உண்மை என்ன?
தவெக ஆட்சியில் Fancy எண் பெறுவதற்கான கட்டணம் குறித்து இணையத்தில் தேடினோம். கடந்த ஜூன் 23 அன்று ‘DT Next’ ஆங்கில செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது.

அதன்படி, கடந்த ஜூன் 19ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், ‘1989ஆம் ஆண்டின் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளை திருத்தம் செய்வது குறித்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் படி வாகனப் பதிவு எண்களுக்கு முன்பதிவு செய்வது, Fancy எண் பெறுவது போன்றவற்றுக்கான கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்துவது பற்றிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

மேலும், தற்போது வாகனங்ளுக்கு Fancy எண் வழங்குவதற்கு ஒரே மாதிரியான கட்டணமுறைக்கு (flat-rate structure) பதிலாக வாகனத்தின் விலையை பொறுத்து வேறுப்பட்ட கட்டணத்தை நிர்ணயிக்கும் முறை கொண்டு வர பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான Fancy எண் கட்டணம் ரூபாய் 1000 முதல் 16,000 வரை இருந்தது, தற்போது திருத்தத்தின் படி 20,000 முதல் 1.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது.
கட்டண உயர்வு குறித்த இந்த திருத்தம் வரைவு அறிக்கையில் தான் உள்ளது, இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மேலும் இதற்கு எதிரான எழும் கருத்துகளை பொறுத்து இது கைவிடப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தவெக ஆட்சியிலும் Fancy எண் வழங்கப்படுவதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதே உண்மை.
இதிலிருந்து, தவெக ஆட்சியில் கட்டணமே இல்லாமல் வாகனங்களுக்கான Fancy எண் வழங்கப்படுவதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்பது தெரிய வருகிறது.
முடிவு:
தவெக ஆட்சியில் கட்டணமே இல்லாமல் வாகனங்களுக்கான Fancy எண் வழங்கப்படுவதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும். தவெக ஆட்சியிலும் Fancy எண் வழங்கப்படுவதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதே உண்மை.