யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
யூடியூப் தளத்தில் இருந்த பழைய வீடியோவை பதிவிட்டு, கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படை தாக்குதலால் சேதமடைந்ததாக தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 7ஆம் தேதியன்று ‘Operation Sindoor’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில், இந்திய கப்பல்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கியதாகவும், அதனால் துறைமுகம் பலத்த சேதமடைந்ததாகவும், அதனை ‘கராச்சி துறைமுக நிர்வாகமே’ ஒப்புக்கொண்டதாகவும் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
சேதமடைந்த கராச்சி துறைமுகம் pic.twitter.com/sZtl2ArYQm
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Catastrophic’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இயந்திரங்கள், கட்டிடங்கள் ஆகியவை விபத்திற்குள்ளாகி சேதமடைந்த தருணங்களை தொகுத்து வைப்பதாக இருந்த இந்த வீடியோவில், பரப்பப்படும் இந்த காட்சியும் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த வீடியோ மே 3ஆம் தேதியன்றே யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ‘Operation Sindoor’ தொடங்கியதே மே 7 அன்றுதான்.

மேலும், தேடியதில் ‘THE ECONOMIC TIMES’-ல் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. கராச்சி துறைமுகத்தை இந்திய கப்பல்படை தாக்கியதாக இந்திய பாதுகாப்பு படைகள் சார்பில் எந்த அதிகாரப்பூர்வமான செய்தியும் வெளியிடப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கராச்சி துறைமுக நிர்வாகத்தின் சமூக வலைத்தளக் கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

’கராச்சி துறைமுக நிர்வாகம் (Karachi Port Trust Official)’ தனது ’எகஸ்’ கணக்கை சோதித்த போது, அது Hack செய்யப்பட்டு, அதிலிருந்து பொய் செய்தி பரப்பப்படுவதாகவும் அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. கராச்சி துறைமுகம் எவ்வித சேதமும் அடையவில்லை, வழக்கம் போல் சரக்கு போக்குவரத்தை கையாள்கிறது என்றும் அது தெரிவித்திருக்கிறது.
முடிவு:
யூடியூப் தளத்தில் இருந்த பழைய வீடியோவை பதிவிட்டு, கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படை தாக்குதலால் சேதமடைந்ததாக தவறாக பரப்பப்படுகிறது.
