யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 11 அன்று “நல்லாட்சி நடத்தும் என்னை, முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல், தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசி வருகின்றார் எதிர்க்கட்சித் தலைவர்” என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேசியதை, தவெக தலைவர் விஜய் குறித்து பேசியதாகக் குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தவெகவின் இரண்டாவது மாநாடு சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிலையில், அவர் ஆளுங்கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் "தான் நல்லாட்சி நடத்தி வருவதாகவும், விஜய் தரம் தாழ்ந்தவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், வீடியோவின் முழுப்பகுதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று “2026 தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்தே தொடங்கும்! திராவிடமாடல் ஆட்சியில் வளர்ச்சியின் அளவுகோலாகப் பெயர் பெற்றுள்ள தமிழ்நாடு, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் புதிய உச்சங்களை அடையும்!“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருத்தைக் காண முடிந்தது.
2026 தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்தே தொடங்கும்!
#DravidianModel ஆட்சியில் வளர்ச்சியின் அளவுகோலாகப் பெயர் பெற்றுள்ள தமிழ்நாடு, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் புதிய உச்சங்களை அடையும்! pic.twitter.com/ANZxhKeBYf
சரியாக வீடியோவின் 50வது வினாடியில் இருந்து காணப்படும் பகுதி, பரவி வரும் வீடியோவோடு கச்சிதாமாக பொருத்துகிறது. அதில், முதல்வர் ஆகஸ்ட் 11 அன்று “நல்லாட்சி நடத்தும் என்னை, முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல், தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசி வருகின்றார் எதிர்க்கட்சித் தலைவர்” என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே அவர் பேசுகிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதை, தவெக தலைவர் விஜய் குறித்து பேசியதாகக் குறிப்பிட்டு பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
இதனை, “The Hindu“ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலமும் உறுதி செய்ய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தான் நல்லாட்சி நடத்தி வருவதாகவும், விஜய் தரம் தாழ்ந்தவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார் என்றும் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.