யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 நவம்பரில், ஜம்மு காஷ்மீரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூபிந்தர் சிங் மற்றும் சோஹன் சந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ அடித்து இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்படும் காட்சி என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் MLA ரோட்டில் கதற கதற அடித்து இழுத்து செல்ல பட்டு கைது.. உள்நாட்டு தேச துரோகிகளை கள எடுப்பு... அப்டியே ஒரு எட்டு தமிழ்நாட்டு நாகப்பட்டிணம் பக்கமா வந்து ஆளூரை அடிச்சி இழுத்துப்போங்க சார்..
விரிவான விளக்கம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ அடித்து இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்படும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
நேற்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் அஸ்ஸாம் எம்எல்ஏ.அந்த எம்எல்ஏ வை... நாயை பிடித்து இழுத்து செல்வது போல இழுத்துச் செல்கிறது இந்திய ராணுவம்...
அடேங்கப்பா.. எம்எல்ஏக்கே இந்த கதினா... நம்ம ஊரு தேச விரோத வீடியோ பதிவு போடுபவர்களின் நிலைமை.. pic.twitter.com/hC27eAMMTW
#திருமாவளவனுக்கு எச்சரிக்கை பதிவு கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் !
கீழே உணக்கான ட்ரைலர் அப்பு !
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் MLA ரோட்டில் கதற கதற அடித்து இழுத்து செல்ல பட்டு கைது
உள்நாட்டு தேச துரோகிகளை
கள எடுப்பு... #இந்தியா pic.twitter.com/OUl0e8XVpR
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ அடித்து இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்ததில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா சம்பவத்தை பாஜக உயர்மட்டத் தலைமையுடன் தொடர்புபடுத்தியதற்காக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ ‘அமினுல் இஸ்லாம்’ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்பதை அறிய முடிந்தது.
ஆனால் இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டதாக எந்த ஊடகத்திலும் செய்தி வெளியிடப்படவில்லை.
எனவே இது தொடர்பாக பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2024 நவம்பர் 27 அன்று “NH1 News“ யூடியூப் பக்கத்தில் “கத்ரா போலீசாரால் பூபிந்தர் சிங் மற்றும் சோகன் சந்த் கைது செய்யப்பட்டனர்” என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த வீடியோ ஒன்று கிடைத்தது. பரவி வரும் வீடியோவோடு இவை கச்சிதமாகப் பொருந்துவதையும் காண முடிந்தது.
எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்தோம். “நவம்பர் 27, 2024 அன்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலின் மலையேற்றப் பாதைக்கு ரோப்வே திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூபிந்தர் சிங் மற்றும் சோஹன் சந்த் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்பதை “Daily Excelsior” ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி மூலம் அறிய முடிந்தது.
இதன் மூலம் கடந்த 2024 நவம்பரில், ஜம்மு காஷ்மீரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூபிந்தர் சிங் மற்றும் சோஹன் சந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ அடித்து இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்படும் காட்சி என்று கூறி பாஜகவினர் உட்பட பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ அடித்து இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்படும் காட்சி என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ தவறானது என்பதை அறிய முடிகிறது.