யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முடியவில்லை, அக்கோவிலில் தீபம் ஏற்றுவதை தடுக்கிறார்கள் என்று இந்து முன்னணி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
பரவிய செய்தி
கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம்!!
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி
தீபம் ஏற்ற, திருப்பரங்குன்றம் வாருங்கள்!!

விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் சுப்பிரமணிய சாமி கோவிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்வாவில் ஆடு பலியிடுவதை தடை செய்ய வேண்டும், சிக்கந்தர் தர்கே அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் போன்ற சர்ச்சைகளில் கடந்த ஓராண்டாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒருவர் பேட்டி கொடுக்கும் சிறிய வீடியோவை பதிவிட்டு ‘‘திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல வழியில்லை, தீபம் ஏற்றுவதைத் தடுக்கிறார்கள்; திருப்பரங்குன்றத்தின் சுதந்திரமே பறிபோய் விட்டது” என்று இந்து முன்னணி தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பரப்பிவருகிறது.
உண்மை என்ன?
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பொது மக்கள் செல்வது குறித்து யூடர்ன் தரப்பிலிருந்து நேரடியாகவே ஆய்வு செய்தோம்.
பொதுமக்கள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எந்தவித இடையூறும் இன்றி சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் வியாழன் அன்று (நவம்பர் 27) பொதுமக்கள் மலை மீதுள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாக இங்கே கொடுத்துள்ளோம்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் கோவில் நிர்வாகத்தினால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டே வருகிறது. கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட தீபத்தின் புகைப்படங்கள் விகடன் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. தீபத்தின் ஒரு புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (நன்றி: விகடன்).

ஆனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கல்லின் மீதுதான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பிரச்சினையை எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் தர்கா அருகில் உள்ள கற்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராமரவிகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் தேடியதில், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றி 1996ஆம் ஆண்டு வழக்கு ஒன்றின் உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி ‘BBC தமிழ்’ வெளியிட்டுள்ள செய்தியைக் காணமுடிகிறது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கனகராஜ், ”மலையில் நெல்லித்தோப்புக்கு (தர்காவுக்கு செல்லும் வழியில் உள்ளது) 15 மீட்டருக்கு அப்பால் தர்கா இருப்பதைக் கணக்கில் வைத்துக்கொண்டு சரியான இடத்தைத் தேர்வு செய்து தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு தீபம் ஏற்றும் இடத்தை தேர்வு செய்யும் அதிகாரத்தை கோவிலுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம், மலையில் ஏற்கனவே தீபம் ஏற்றப்பட்டு வந்த இடமான பிள்ளையார் கோவில் தான் தீபம் ஏற்றுவதற்கு சரியான இடம் என்று முடிவு செய்தது. அப்போதிலிருந்து இப்போது வரை உச்சி பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் உச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அரசு தடை விதித்திருந்ததாக உண்மைக்கு மாறான செய்தியை இந்து முன்னணி அமைப்பினர் பரப்பி வருகின்றனர். தர்கா அருகில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்றவேண்டும் என்ற இந்து முன்னணி அமைப்பினரின் கோரிக்கையத் தான் அரசும் கோவில் நிர்வாகமும் மறுத்திருந்தது.
இந்நிலையில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்று ராமரவிகுமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அங்கே தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை தீபத்தினை மலையின் எந்த இடத்தில் ஏற்றுவது என்பதுதான் இந்த வழக்கு. எனவே மலையில் தீபம் ஏற்றுவதற்கே தடை இருந்ததாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் பரப்பும் தகவலில் எந்த உண்மையும் இல்லை.
எனவே மேற்கண்ட தகவல்களிலிருந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்பதும், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் இதுவரை எந்த தடையும் இருந்ததில்லை என்பதும் தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதைத் தடுக்கிறார்கள்; மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கே தடை விதித்திருக்கிறார்கள் என்று இந்து முன்னணி பொய்யான தகவலை பரப்பிக்கொண்டிருக்கிறது.