யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
'கரூர் சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரின் உடலும் ஒரு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை முடித்து காலை 6 மணிக்குள் அனைத்து உடல்களை எரித்து விட்டார்கள்’ - சவுக்கு சங்கர்.

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்தனர். அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நடந்து வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் தனது யூடியூப் தளத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பேசிய சவுங்கு சங்கர், ’கரூர் சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரின் உடல்களுக்கும் மணி நேரத்தில் பிரேத பரிசோதனை முடித்துவிட்டனர். இவ்வாறு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒரு மணி நேரம் கூட அவர்கள் வீட்டில் உடல்கள் வைக்கவிடவில்லை. காலை 6 மணிக்குள் அனைத்து உடல்களையும் எரித்து விட்டார்கள்’ என்று பேசியுள்ளார்.
உண்மை என்ன?
Claim 1:
‘எடப்பாடி பழனிச்சாமி காலை 7 மணிக்கு கரூர் வருவதற்கு முன்பு, கரூர் கூட்ட நெரிசலில் இறந்த அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. அதிகாலை 4 மணிக்கே இறந்த 41 பேருக்கும் பிரேத பரிசோதனை செய்து முடித்துவிட்டனர்’ என்று சவுக்கு சங்கர் கூறுகிறார்.
உண்மை:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது செப்டம்பர் 27ஆம் தேதி இரவு. அதற்கு மறுநாள் செப்டம்பர் 28ஆம் தேதி காலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல கரூர் மருத்துவமனை சென்றதாக ‘புதிய தலைமுறை’ வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது. அதேவேளையில், கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை கால வரிசைப்படி ‘The Hindu’ செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதில் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களை காண காலை 8.30 மணிக்கு கரூர் மருத்துவமனைக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி செப்டம்பர் 28ஆம் தேதி காலை 8 மணிக்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘31 உடல்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை நடந்து முடிந்திருக்கிறது. காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலை மட்டும் மோசமாக உள்ளதாகவும், அவர்கள் வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்ட சிகிச்சையில் உள்ளதாகவும்’ குறிப்பிடுகிறார்.
#WATCH | “இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் நலமுடன் உள்ளனர்”
கரூரில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி பேட்டி#SunNews | #TVKVijay | #TVKStampede pic.twitter.com/RXnmjFugcR
இதிலிருந்து காலை 4 மணிக்குள்ளாக இறந்த 41 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாக சவுக்கு சங்கர் கூறும் தகவல் தவறானது என்பது தெரிய வருகிறது.
Claim 2:
’இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களுக்கு கொடுக்காமல் அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இறந்தவர்கள் உடல்கள் அவர்களது வீடுகளில் ஒரு மணி நேரம் கூட வைக்கவிடவில்லை. வேக வேகமாக எரிக்கப்பட்டிருக்கின்றன. காலை 6 மணிக்கே எல்லா உடல்களும் எரிக்கப்பட்டுவிட்டது’ என்று சவுக்கு சங்கர் கூறுகிறார்.
உண்மை:
இது குறித்து இணையத்தில் தேடுகையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்த செய்திகளைக் காணமுடிகிறது.

மேலும், ஒப்படைக்கப்பட்ட உடல்கள் அவர்களது வீடுகளில் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்ட காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளதைக் காணமுடிகிறது. குழந்தை குரு விஷ்ணு, செல்போன் கடை நடத்தி வந்த மணிகண்டன் ஆகியோரின் உடல்கள் அவர்களது வீடுகளில் வைக்கப்பட்டிருந்த செய்திகளை காணமுடிகிறது.

மேலும் மற்றொரு செய்தியில், இறந்த 6 வயது சிறுவனின் உடல் காலை 7 மணிக்கு பிரேத பரிசோதனை செய்வதாக கூறப்பட்டிருந்த நிலையில் பகல் 12 மணி ஆன பின்னரும் பிரேத பரிசோதனை முடித்து உடல் ஒப்படைக்கப்படவில்லை என்று உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிய வருகிறது.
இவையெல்லாம் இறந்தவர்கல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் காலை 6 மணிக்கே எரிக்கப்பட்டுவிட்டதாக சவுக்கு சங்கர் சொல்வது பொய்யான தகவல்கள் என்பதை நிரூபிக்கின்றன.
முடிவு:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்பி வருகிறார்.