யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
பரவிய செய்தி
மயிலாடுதுறையின் அடையாளங்களில் ஒன்றான மணிகூண்டிற்கு தேசிய கொடியின் மூவர்ண நிறம் தீட்ட தேசியக் கொடி மக்கள் இயக்கத்தின் சார்பில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் முஸ்லீம்கள் எதிர்ப்பால் மணிகூண்டிற்கு மூவர்ண நிறம் தீட்ட முடியாமல் இருக்கிறது.

விரிவான விளக்கம்
மயிலாடுதுறை நகரத்தில் உள்ள பிரபலமான மணிகூண்டிற்கு தேசிய கொடியின் மூவர்ண நிறம் தீட்ட நகராட்சி நிர்வாகத்திடம் ’தேசியக் கொடி மக்கள் இயக்கம்’ சார்பாக அனுமதி பெறப்பட்டதாகவும், ஆனால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மணிகூண்டிற்கு மூவர்ண நிறம் தீட்ட முடியாத நிலை இருப்பதாகவும் ’இந்து முன்னணி’ சார்பில் ஒரு இணைய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்துத்துவ ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
இதற்கு மூவர்ண நிறம் அடிக்க சம்மதிக்காததால்.. இதற்கு காவி நிறம் அடிக்க வேண்டும்.
இந்துக்கள் சம தர்மமாக எப்போதுமே இருப்பதால் தான் மூவர்ண நிறம் அடிப்பதற்கு அனுமதி கேட்டனர்.
இனி நம் கோரிக்கையை சுய தர்மமாக செய்வோம். மணி கூண்டிற்கு காவி வர்ணம் அடிக்க அனுமதி கேட்போம். pic.twitter.com/AJD6QpekBf
உண்மை என்ன?
’மயிலாடுதுறை மணிகூண்டிற்கு தேசிய கொடி நிறம் தீட்டபட்டது’ குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். அப்போது ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் கடந்த 2024 அக்டோபர் மாதம் இந்த மணிக்கூண்டின் வரலாறு பற்றிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இந்த மணிக்கூண்டு தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் இருப்பதைக் காணமுடிகிறது.

மேலும் ‘Google Map’ செயலியில் இந்த மணிக்கூண்டு பற்றிய புகைப்படங்களைத் தேடினோம். அதில் 2023 மார்ச் மாதம் எடுக்கப்பட்ட மணிக்கூண்டின் புகைப்படத்தைக் காணமுடிந்தது. அதிலும் மணிக்கூண்டு தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் உள்ளதைக் காணமுடிகிறது.

இதிலிருந்து கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டதை மறைத்து, முஸ்லிம்கள் இந்த மணிக்கூண்டிற்கு தேசியக் கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுப்பதாக பொய்யான செய்தியை மதவாத நோக்கில் ’இந்து முன்னணி’ உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பரப்பிவருகின்றன.