யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000-ஐ பெறுவதற்கு, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும். அம்மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்புகளைத் தடையின்றி முடிக்கும் வரை மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.1,000 நிதியை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஆணாகப் பிறந்த அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் shorts tamil என்ற இணையதளத்தில், boys என்று டைப் செய்து, இதற்கான லிங்க்கை டவுன்லோட் செய்து apply செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
முதலில் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கியது குறித்து குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ”கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்” என்ற தலைப்பில் Hindu Tamil ஊடகத்தில் ஆகஸ்ட் 10, 2024 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் தொடக்க விழா,கோவை அரசு கலைக் கல்லூரிவளாகத்தில் நடந்தது. திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான அட்டைகளை (‘டெபிட் கார்டு’) மாணவர்களிடம் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இணையதளப்பக்கத்தில் இது குறித்து தேடிப் பார்த்தோம். தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000-ஐ பெறுவதற்கு, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும். அம்மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்புகளைத் தடையின்றி முடிக்கும் வரை மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.1,000 நிதியை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், ஆணாகப் பிறந்த அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்குவதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
