யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கோயில்களில் இருந்து ரூ.445 கோடி வரி வசூல். அதில் ரூ.330 கோடி மசூதி மற்றும் சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்” என்று கூறி பரவி வரும் செய்தி தமிழ்நாட்டைச் சார்ந்தது அல்ல.
பரவிய செய்தி
உண்டியல்ல காசு போடாதீங்கன்னு சொன்னா யாரு கேக்குறா? நம்ம காசு யாருக்குலாம் போதுனு பாத்துக்கோங்க..
விரிவான விளக்கம்
“தமிழ்நாட்டில் கோயில்களில் இருந்து ரூ.445 கோடி வரி வசூல். அதில் ரூ.330 கோடி மசூதி மற்றும் சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்” என்று குறிப்பிடப்பட்ட செய்தித்தாளின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் பதிவுகளில், “கோவிலுக்கு செல்லும் 21 ஆம் பக்க கொத்தடிமைகள் தவிர மற்ற இந்துக்களின் கவனத்திற்கு, தயவு செய்து உண்டியலில் யாரும் காசு போடாதீர்கள்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
கோவிலுக்கு போகும் 21 ஆம் பக்க கொத்தடிமைகள் தவிர மற்ற இந்துக்களின் கவனத்திற்கு,
தயவு செய்து உண்டியல்ல யாரும் காசு போடாதீங்க 🙏 pic.twitter.com/gRrQi7d7GA
உண்மை என்ன?
பரவி வரும் செய்தித்தாளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது குறித்து எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும் பரவி வரும் செய்தித்தாளை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், “கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை உறுதி செய்வது போல், இந்து கோயில்களுக்கு சித்தராமையா அரசு புது வரி விதித்துள்ளது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. இதன் மூலம் பரவி வரும் செய்தி தமிழ்நாட்டைச் சார்ந்தது அல்ல, கர்நாடகாவைச் சார்ந்தது என்பது உறுதியானது.

எனவே கர்நாடகாவில் உள்ள கோவில்களுக்கு வரிவிதிப்பு முறை குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்து “இந்து தமிழ் திசை” வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், “கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்குப் பிறகு, கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், கர்நாடகாவில் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தம் தொடர்பான செய்தியை, தமிழ்நாட்டில் நடந்தது போல பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், “கோயில்களில் இருந்து ரூ.445 கோடி வரி வசூல். அதில் ரூ.330 கோடி மசூதி மற்றும் சர்ச்சுகளுக்கு வாரி வழங்கல்” என்று கூறி பரவி வரும் செய்தி தமிழ்நாட்டைச் சார்ந்தது அல்ல என்பது உறுதியாகிறது.