யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று இந்த திட்டத்தின் கீழ் கடைசி ஸ்மார்ட் போர்டை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பரவிய செய்தி
அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு வைக்கப்படும் என்று கூறிய அரசு ஒரே போர்டை அனைத்து பள்ளிகளையும் வைத்து போட்டோ சூட் நடத்தி விட்டு சென்றிருக்கிறது இப்பொழுது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை திருட்டு திமுகவின் தில்லுமுல்லு அம்பலம்.

விரிவான விளக்கம்
ஒரே டிஜிட்டல் போர்டை அனைத்து அரசு பள்ளிகளிலும் வைத்து போட்டோ சூட் நடத்தப்பட்டதாகவும், இப்போது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை என்றும் தமிழ் ஜனம் ஊடகத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு வைக்கப்படும் என்று கூறிய அரசு ஒரே போர்டை அனைத்து பள்ளிகளையும் வைத்து போட்டோ சூட் நடத்தி விட்டு சென்றிருக்கிறது இப்பொழுது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை திருட்டு திமுகவின் தில்லுமுல்லு அம்பலம். pic.twitter.com/THf0alK7jl
உண்மை என்ன?
அரசு பள்ளியில் டிஜிட்டல் போர்டு இருப்பது குறித்து keywords மூலம் கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது Sun News ஊடகத்தில் ஜனவரி 27, 2025 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க 'திறன்மிகு வகுப்பறை' திட்டத்தின் கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#JustNow | டிஜிட்டல் மயமான அரசுப் பள்ளிகள்.. ‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து சாதனை#SunNews | #DigitalClassroom | #TNSchools | @Anbil_Mahesh | @tnschoolsedu pic.twitter.com/d7h6gOU1jR
இது குறித்து மேலும் தேடிய போது, Kalaignar ஊடகத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. அதில் 'திறன்மிகு வகுப்பறை' திட்டத்தின் மூலம் 22,931 அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டை கொண்டு சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று கடைசி ஸ்மார்ட் போர்டை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் காஞ்சிபுரம், கோவை, கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது என்பதை பல்வேறு செய்திகளில் வெளியானது மூலம் அறிய முடிந்தது.
முடிவு:
எனவே, ஒரே டிஜிட்டல் போர்டை அனைத்து அரசு பள்ளிகளிலும் வைத்து போட்டோ சூட் நடத்தப்பட்டதாகவும், இப்போது எந்த பள்ளியிலும் டிஜிட்டல் போர்டு இல்லை என்றும் பரவும் செய்தி தவறானவை. ‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது.