யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“தூத்துக்குடியில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியதால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் அவர்களை கொலை செய்து புதைப்பு” எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. கொலை செய்தவர்களும், கொலை செய்யப்பட்டவர்களும் உறவினர்கள் என்பதும் அவர்களுக்கிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பரவிய செய்தி
தூத்துக்குடியில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறிய இரண்டு பேரை, கஞ்சா கும்பலே கொலை செய்து புதைத்திருக்கிறார்கள்.
விரிவான விளக்கம்
தூத்துக்குடியில் சமீபத்தில் மாரிப்பாண்டி, அருள்ராஜ் என்கிற சகோதரர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், “தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்சினை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்களை, போதைக் கும்பல் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, மண்ணில் புதைத்துள்ள செய்தி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது” என்று குறிப்பிட்டு தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்சினை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்களை, போதைக் கும்பல் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, மண்ணில் புதைத்துள்ள செய்தி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இதில்,…
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “தூத்துக்குடியில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியதால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் அவர்களை கொலை செய்து புதைப்பு” எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிந்தது.
“எதிரிகளும், கொலை செய்யப்பட்டவர்களும் உறவினர்கள் என்பதும் அவர்களுக்கிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது” எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
"தூத்துக்குடியில் கஞ்சாகும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிப்பதாக கூறியதால் கஞ்சாகும்பல் அவர்களை கொலைசெய்து புதைப்பு" என செய்தி வெளியிட்டதற்கு காவல்துறை மறுப்பு-உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதத்தினால் கொலை-காவல்துறை விளக்கம்@CMOTamilnadu@tnpoliceoffl@SouthZoneTNpol pic.twitter.com/FtmcWvvX58
அந்த அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 28.07.2025 அன்று ஒருவர் காணாமல் போனதாக வந்த புகாரின்பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் அன்றைய தினமே காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து சந்தேக அடிப்படையில் காவல்துறையினர் சில நபர்களை விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேற்படி காணாமல் போனவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கின் எதிரியான தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரிதன் (25) என்பவரின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டதில் அவரது உறவினர்களான இருவர்கள் தான் காரணம் என ரிதனுக்கும் கொலையானவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது.
எனவே மேற்படி செய்தி தொலைக்காட்சி, கஞ்சா போதை கும்பல் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்ததற்காக கஞ்சா கும்பல் கொலை செய்ததாக செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவிப்பதுடன், உறவினர்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளது எனவும் மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், தூத்துக்குடியில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாகக் கூறிய இரண்டு பேரை, கஞ்சா கும்பலே கொலை செய்து புதைத்திருக்கிறார்கள் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.