
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்நிலையில் சீனாவில் ஜிசாங்கில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட், மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் வானிலிருந்து ஒரு விண்பொருள் விழுவதுபோன்றும், அதைப்பார்த்து மக்கள் அஞ்சி ஓடுவதையும் காணமுடிகிறது.
சீனா ஜிசாங்கில் இருந்து ஏவிய ராக்கெட் விழுந்து நொறுங்கியது pic.twitter.com/02fYo8KD4w
— E Chidambaram. (@JaiRam92739628) June 24, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், சீனாவின் ஜிசாங் (Xichang) செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து ஏவப்பட்ட The Long March 2C எனப்படும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பதை அறியமுடிந்தது.

News18 ஊடகம் இதுகுறித்து "வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு சீன செயற்கைக்கோளின் மீதமுள்ள பகுதிகள் (Debris) மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தது" என்ற தலைப்பில் ஜூன் 23ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில், 'லாங் மார்ச் 2C' ராக்கெட், SVOM செயற்கைக்கோளை ஏற்றிக்கொண்டு, ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு Xichang செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து புறப்பட்டது. வெற்றிகரமாக ஏவப்பட்ட போதிலும், ராக்கெட்டில் இருந்து ராக்கெட் பூஸ்டர் குப்பைகள் விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மக்கள் வசிக்கும் பகுதியின்மீது விழுந்ததாக விண்வெளி செய்திகள் தெரிவிக்கின்றன" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக ராக்கெட்டுக்கு உந்துசக்தியை கொடுக்க ராக்கெட் பூஸ்டர்கள் இருக்கும். அவை எரிபொருளை கொடுத்து முடித்த பின்னர் ராக்கெட்டிலிருந்து கடலில் விழும். இதனை Rocket Debris என்பார்கள். இதுதான் தற்போது சீனாவில் மக்கள்வாழும் பகுதியில் விழுந்துள்ளது.
மேலும் பரவி வரும் இதே வீடியோ, Times Now ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில்,"பார்க்க | சீன ராக்கெட் குப்பைகள் மீண்டும் பூமியில் விழுந்து குடியிருப்பு பகுதிக்கு அருகில் வெடித்து சிதறுவதால் மக்கள் பாதுகாப்பிற்காக ஓடுகிறார்கள்" என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
WATCH | People run for safety as Chinese rocket debris falls back to Earth and explodes near a residential area.#China #ChinaRocket pic.twitter.com/I6r5ZY9YkE
— TIMES NOW (@TimesNow) June 23, 2024
இதன்மூலம், சீனாவில், லாங் மார்ச் 2C ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுப்பப்பட்ட ராக்கெட் பூஸ்டர்கள், எரிபொருளை கொடுத்து முடித்த பின்னர் குப்பைகளாக (Rocket Debris) மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளன என்பதையும், இதை பலரும் சீனாவில் ஏவப்பட்ட ராக்கெட்தான் தோல்வியடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததாகக்கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறியமுடிகிறது.
மேலும் படிக்க: விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், சீனாவில் ஏவப்பட்ட ராக்கெட் விழுந்து நொறுங்கும் காட்சி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
