யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தோல்வியுற்றது பற்றியும் டி.ஆர்.பாலு கோவில்களை இடித்தது பற்றி பேசியது குறித்தும் தவறான தகவலை கூறுயுள்ளார் அர்ஜுன் சம்பத்.
பரவிய செய்தி
‘கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலையின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் திமுகவின் ஓட்டு திருட்டு தான். இந்துக்கள் ஓட்டுகளை மட்டும்தான் திருட முடியும். திமுக காரனுக்கு இந்து ஓட்டை எப்படி திருடுவது என தெரியும். ‘எங்களுக்கு ஓட்டு எப்படி வாங்க வேண்டும் என தெரியும். நான் மூணு கோவிலை இடித்தேன்’ என்று டி.ஆர். பாலு வெளிப்படையாக பேசியிருக்கிறார்’ - இளைய பாரதம் நேர்காணலில் அர்ஜுன் சம்பத்.
விரிவான விளக்கம்
‘இளைய பாரதம்’ யூடியூப் தளத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்-ன் சமீபத்திய நேர்காணல் ஒன்று வெளியானது. அதில், ‘கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலையின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் திமுகவின் ஓட்டு திருட்டு தான். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் 30,000 பேரால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் தான் அண்ணாமலை தோற்றார்’ என்றும் ‘முஸ்லிம் ஓட்டை திருட முடியுமா? கிறிஸ்தவர் ஓட்டை திருட முடியுமா? ஆனால் இந்து ஓட்டு என்றால் திருடி கொள்ளலாம். திமுக காரனுக்கு இந்து ஓட்டை எப்படி திருடி கொள்வது என தெரியும். இதைத்தான் ‘எங்களுக்கு ஓட்டு எப்படி வாங்க வேண்டும் என தெரியும். நான் மூணு கோவிலை இடித்தேன்’ என்று டி.ஆர். பாலு வெளிப்படையாக பேசியிருக்கிறார்’ என்றும் இந்த நேர்காணலில் அர்ஜுன் சம்பத் கூறுகிறார்.
உண்மை என்ன?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியின் தேர்தல் முடிவுகள் குறித்து இணையத்தில் தேடினோம். ‘BBC தமிழ்’ செய்தித்தளத்தில் கோவை தொகுதியின் தேர்தல் முடிவுகள் பற்றி ஒரு செய்திக் கட்டுரையைக் காணமுடிந்தது.
அதில், ‘வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்று முடிவில் திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த இருவருக்கும் இடையில் 1,18,068 வாக்குகள் வித்தியாசம் இருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நேர்காணலில் வெறும் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியுற்றதாக தவறான தகவலை அர்ஜுன் சம்பத் கூறுகிறார்.
மேலும், டி.ஆர். பாலு கோவில்களை இடித்தது பற்றி பேசியது குறித்து தேடினோம். இது குறித்து ஏற்கனவே ‘YouTurn’ தளத்தில் எழுதியிருக்கிறோம். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடந்த மாநாட்டில் பேசிய டி.ஆர்.பாலு ‘நான்கு வழிச்சாலைக்காக 100 ஆண்டுகள் பழைய கோவிலையும் கொல்கத்தாவில் 100 ஆண்டுகள் பழைய மசூதியையும் இடித்திருக்கிறேன். கோவிலை இடித்தால் ஓட்டுகள் வராது என்று சொன்னார்கள். ஆனால் என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லெட்சுமி கோவில், பார்வதி கோவில் ஆகிய மூன்று கோவில்களை நான் தான் இடித்தேன். எனக்கு ஒட்டு வராதுன்னு தெரியும். ஆனா, ஒட்டு எப்படி வர வைக்குறதுனும் தெரியும். இதை விட சிறந்ததாக, 100, 200 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் செய்து தரேன்னு சொல்லி, அந்த இடத்தில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து விட்டு பக்கத்தில் கோவில் கட்டி கொடுத்தேன் " எனப் பேசி இருக்கிறார்.
இதனை திரித்து, மூன்று கோவில்களை இடித்ததையும் இந்துகள் ஓட்டை எப்படி வாங்கவேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றும் டி.ஆர்.பாலு பேசியதாக தவறாக பரப்பி பரப்பப்படுகிறது.
முடிவு:
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 30,000 பேரை வாக்களிக்கவிடாமல் தடுத்து திமுக ஓட்டுத் திருட்டு செய்ததாலே அண்ணாமலை தோல்வியுற்றதாகவும், மூன்று கோவில்களை இடித்ததையும் இந்துகள் ஓட்டை எப்படி வாங்கவேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றும் டி.ஆர்.பாலு பெருமையாக பேசியதாகவும் தவறாக பரப்புகிறார் அர்ஜுன் சம்பத்.