யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் ஜாதி ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேறுவதற்காக 1981-ல் இஸ்லாமுக்கு மதம் மாறியது அதைப் பற்றித்தான் திருமாவளவன் ஆய்வு செய்துள்ளார்.
பரவிய செய்தி
திருமாவளவன் முனைவர் பட்டத்தை மத மாற்றத்தில் வாங்கினார். ‘மக்களைப் பெரிய அளவில் மாற்றம் செய்வது எப்படி?’ அதுதான் அவரது subject. -அஸ்வத்தாமன் (மாநிலச் செயலாளர், பாஜக)
விரிவான விளக்கம்
மக்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். ‘மக்களைப் பெரிய அளவில் மதமாற்றம் செய்வது எப்படி?’ என்பதுதான் அவரது ஆய்வுத் தலைப்பு என பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
உண்மை என்ன?
அஸ்வத்தாமன் பேசியதைத் தொடர்ந்து திருமாவளவனின் ஆய்வுக்கட்டுரைகள் குறித்துத் தேடினோம். அவரது ஆய்வின் தலைப்பு ‘Mass Religious Conversion of Meenakshipuram - A Victimological Perspective’ என ‘பிபிசி தமிழில்’ வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே மேக்கரை என்னும் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் மறவர் சமுதாயத்தைச் சார்ந்த இருவர் 1980, டிசம்பர் மாதம் கொல்லப்பட்டனர். இந்த கொலையில் மீனாட்சிபுரத்தைச் சார்ந்த தலித்துகள் குறிப்பாக தங்கராஜ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காவல் துறையினர் மீனாட்சிபுரம் பகுதிக்குள் நுழைந்து தலித் மக்களைக் கைது செய்து விசாரணை என்கிற பெயரில் மிக மோசமாக கொடுமைப்படுத்தியது.
விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் கொலை செய்யப்பட்டவரின் ஜாதியைச் சேர்ந்தவர். இதனால்தான் இந்த ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது எனத் தலித் மக்கள் கருதியதையடுத்து, ஜாதி கொடுமையிலிருந்து விடுபட மதமாற்றம் தீர்வாக இருக்குமென 180 தலித் குடும்பங்கள் இஸ்லாம் மதம் மாறினர்.
டாக்டர் அம்பேத்கரை அரசியல்ரீதியாக ஏற்ற தலித் மக்கள் மதமாற்றம் என்று வரும்போது இஸ்லாத்தை ஏற்றது ஏன் என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த ஆய்வினை தான் மேற்கொண்டதாக திருமாவளவன் பிபிசி நேர்காணலில் கூறியுள்ளார்.
மேலும் இவரது ஆய்வு ‘மதமும் மதமாற்றமும்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது. இவற்றில் எதிலும் ’மதம் மாற்றுவது எப்படி’ என எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஜாதிரீதியில் நடந்த ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட மதமாற்றம் ஒரு தீர்வாக அமையுமென தலித் மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது பற்றித்தான் திருமாவளவன் ஆய்வு செய்துள்ளார். ஆனால், பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமனோ திருமாவளவன் ஆய்வு குறித்துப் பொய் செய்தி பரப்புகிறார்.
முடிவு:
‘மக்களைப் பெரிய அளவில் மதமாற்றம் செய்வது எப்படி?’ என்ற தலைப்பில் திருமாவளவன் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டதாக பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் சொன்ன தகவல் தவறானது.
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் ஜாதி ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேறுவதற்காக 1981-ல் இஸ்லாமுக்கு மதம் மாறியது பற்றித்தான் திருமாவளவன் ஆய்வு செய்துள்ளார்.