யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது போலியாக Edit செய்து உருவாக்கப்பட்ட அட்டைப்படம் ஆகும். ‘Cockroach Janata Party’ பற்றி தான் உண்மையான அட்டைப்படம் குறிப்பிட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கிறது’ என்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். மே 10ஆம் தேதி தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உட்பட பல பாலியல் குற்றங்களும் கொலைகளும் நடந்து வருகின்றன. இது குறித்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன.
இந்நிலையில், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திமுக ஊதி பெரிதுபடுத்துவதாக சொல்லி ‘விகடன்’ பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஊதி பெரிதாக்கும் எதிர்க்கட்சிகள். ✍️ pic.twitter.com/KJgYJW5aWD
உண்மை என்ன?
பரப்பப்படும் அந்த அட்டைப்படத்தில் தேதி ‘31.5.1025’ என்று எழுதப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மே மாதம் ’31.5.2026’ என்று தேதி குறிப்பிடப்படும் இடத்தில் ‘31.5.1025’ என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விகடன் குழுமம் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் அட்டைப்படத்தில் ‘விகடன்’-ல் கடைசி எழுத்தான ‘ன்' என்பதை திருப்பி எழுதி அது ‘100’ என்று பொருள்படும் படியாக வடிவமைக்கப்பட்ட ‘Design’ கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இருந்தது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பரப்பப்படும் அட்டைப்படத்தில் ‘ன்' நேராகவே எழுதப்பட்டுள்ளது. இது ‘விகடன்’ இதழின் பழைய ‘Design’ ஆகும். இது தற்போது விகடன் குழுமத்தால் நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மே மாதம் ’31.5.2026’ தேதியில் வெளியான ’விகடன் (ப்ளஸ்)’ இதழின் உண்மையான அட்டைப்படத்தை விகடன் தளத்தில் காண முடிகிறது. அதில் ‘Cockroach Janata Party’ பற்றி தான் அட்டைப்படம் வடிவமைக்கப்படுள்ளது. வேலை வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பேசியதை கண்டித்து ‘Cockroach Janata Party’ என்று இணையத்தில் வைரலானது. அது பற்றியது தான் இந்த அட்டைப்படம்.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, எதிர்கட்சியான திமுக சட்டம் தவெக ஆட்சியில் ஒழுங்கு பிரச்சினை குறித்து ஊதி பெரிதுபடுத்துவதாக வடிவமைக்கப்பட்ட அட்டைப்படம் போலியாக Edit செய்து உருவாக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
போலியாக Edit செய்து உருவாக்கப்பட்ட அட்டைப்படத்தைக் கொண்டு, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து திமுக ஊதி பெரிதாக்குவதாக சொல்லி ‘விகடன்’ அட்டைப்படம் வெளியிட்டதாக பொய்யாக பரப்பி வருகிறார்கள்.
