யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2016-ல் டிரம்ப் மேடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. உண்மையான வீடியோவில் டிரம்ப்பின் தலையில் யாரும் அடிக்கவில்லை. மேடையில் ஒருவர் ஏற முயன்ற போது பதிவுசெய்யப்பட்ட காட்சியை, இவ்வாறு எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது விதித்த 50% வரி, ஆகஸ்ட் 27அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பால் இந்தியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மேடையில் பேசிக்கொண்டிருந்த அதிபர் டிரம்ப் தலையில் ஒருவர் பின்னிருந்து அடிப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் பதிவுகளில் அவ்வாறு அடிப்பவர் காட்டாயம் ஒரு இந்தியராக தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேக்கு ஒன்னும் புரியல.. அடிச்சது இந்தியாவா இருக்கும்னு நினைக்கிறேன்.. pic.twitter.com/OcgdV7xkeA
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவின் முழு வீடியோ கிடைத்தது. மேலும் கடந்த 2016-ல் டிரம்ப் மேடை ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பதையும் அறிய முடிந்தது.
‘CBS News’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் கடந்த 2016-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவில், சரியாக 00.04 வது வினாடியில் பரவி வரும் வீடியோவின் பகுதி கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால் உண்மையான வீடியோவில் டிரம்பின் தலையில் யாரும் அடிக்கவில்லை.
டிரம்ப் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது, மேடையில் ஒருவர் ஏற முயற்சி செய்ததாலேயே, டிரம்ப் அவ்வாறு கோபப்படுகிறார். இந்நிலையில் மேடையில் ஒருவர் ஏற முயன்ற போது பதிவுசெய்யப்பட்ட காட்சியை, அவர் தலையில் பின்புறமாக வரும் ஒரு நபர் அடிப்பது போன்று எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
இதனை, ‘The guardian” ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை ஆய்வு செய்ததன் மூலமும் உறுதி செய்ய முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், மேடையில் பேசிக்கொண்டிருந்த அதிபர் டிரம்ப் தலையில் ஒருவர் பின்னிருந்து அடிப்பது போன்று பரவும் வீடியோ போலியானது என்பது உறுதியாகிறது.