யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆவின், போத்தீஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் பொங்கல் பரிசுத் திட்டம் எனப் பரவும் இணையதளப் பக்கம் போலியானது. இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற போலியான லிங்க்குகளை பகிர வேண்டாம் என்று திருநெல்வேலி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பரவிய செய்தி
இது போலி என்று நினைத்தேன், ஆனால் உண்மையிலேயே எனக்கு ₹50,000 கிடைத்தது!
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
https://ygxx.qjfkz.xyz/17njXphw/3689ecc0279ae8771a2b2126517_11768056637942&p=w

விரிவான விளக்கம்
ஆவின் பொங்கல் பரிசுத் திட்டம் என்று கூறி சமூக வலைதளங்களில் ygxx.qjfkz.xyz என்ற லிங்க் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த லிங்கில் உள்ள கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் ரூ.50,000 பரிசு கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுமட்டுமன்றி போத்தீஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற கடைகளின் பெயரிலும் பொங்கல் பரிசுத் திட்டம் என்று கூறி லிங்க் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, உண்மையில் ஆவின், போத்தீஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற நிறுவனங்கள் பொங்கல் பரிசுத் திட்டம் அறிவித்துள்ளதா என்பது குறித்து தேடியதில், இது குறித்த எந்த அறிவிப்புகளும் இல்லை.
மேலும் பரவி வரும் இணையதள முகவரியை கணினி மூலம் கிளிக் செய்த போது , Error 404 என்று பதில் கிடைத்தது.

ஆனால் மொபைலில் கிளிக் செய்து பார்த்த போது, 4 கேள்விகள் கேட்கப்படுகிறது.
அதற்கு பதலளித்த பின்பு, பதில்கள் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது என்றும், கேள்வித்தாள் மூலம் ரூ.50,000 பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும், பரிசு இருக்கும் சரியான பெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெட்டியை தேர்ந்தெடுத்த பிறகு, அடுத்த பக்கத்தில் ரூ.50,000 ஜெயிச்சிட்டீங்க, முகவரி பதிவை முடித்த உடன், 5-7 நாட்களுக்கு பணம் டெலிவரி செய்யப்படும் என்றிருந்தது.
அதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்ற போது, Whatsapp, Messenger, Telegram ஆகிய செயலிகளில் உள்ள 5 குழுக்கள்/ 20 நண்பர்களுடன் இதை பகிர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, திருநெல்வேலி காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுருந்தது. அதில் "இது போலி என்று நினைத்தேன், ஆனால் உண்மையிலேயே எனக்கு ₹50,000 கிடைத்தது! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் என்று பரவும் லிங்க்-கை எப்போதும் கிளிக் செய்ய வேண்டாம், பகிர வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
#Scam #Alert
இது போலி என்று நினைத்தேன், ஆனால் உண்மையிலேயே எனக்கு ₹50,000 கிடைத்தது! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
எச்சரிக்கையாக இருங்கள் இது போன்ற போலி லிங்க்-கை எப்போதும் கிளிக் செய்ய வேண்டாம், பகிர வேண்டாம்.
Call 1930 or https://t.co/RU3KrwgKpH pic.twitter.com/DVzCvcbFod
இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் பணத்தை இழந்திருந்தால், "1930" என்ற "சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்" மூலமாகவோ, www.cybercrime.gov.in இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலியான ஃபிஷிங் இணையதளங்களை தவிர்ப்பதும் நல்லது.
முடிவு:
எனவே, ஆவின், போத்தீஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் பொங்கல் பரிசுத் திட்டம் எனப் பரவும் இணையதளப் பக்கம் போலியானது. இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற போலியான லிங்க்குகளை பகிர வேண்டாம் என்று திருநெல்வேலி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.