யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பெயரை வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு” என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்ட “நியூஸ் ஜெ” ஊடகத்தின் நியூஸ் கார்டை, “பணம் கொடுக்க தடைகோரி மனு” என்று எடிட் செய்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பணம் கொடுக்கத் தடைகோரி மனு; மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடியும்வரை தடைவிதிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு.
விரிவான விளக்கம்
வருகின்ற 2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருவதையடுத்து, பணம் கொடுக்கத் தடைகோரி மனு என்று குறிப்பிட்டு நியூஸ் ஜெ ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் கார்டில், “மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து தேடிப் பார்த்ததில், ஆகஸ்ட் 01 அன்று “ஸ்டாலின் பெயரை வைக்க தடை; தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு” என்று குறிப்பிட்டு நியூஸ் ஜெ ஊடகப் பக்கத்தில் நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
எனவே “ஸ்டாலின் பெயரை வைக்க தடை“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் இது குறித்து, நியூஸ் ஜெ ஊடகப் பக்கத்திலும், “இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை, எங்கள் பெயரில் போலி பதிவு” என்று மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
முடிவு:
நம் தேடலில், “பணம் கொடுக்கத் தடைகோரி மனு” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ் ஜெ ஊடகத்தின் நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது.