யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காஞ்சிபுரத்தில் “அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்” 1971-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதே போன்று தமிழ்நாட்டில் இதுவரை 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் நலத்திட்டங்கள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
பரவிய செய்தி
காஞ்சிபுரத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் இல்லை - தவெக
விரிவான விளக்கம்
News Tamil 24X7 ஊடகம் காஞ்சிபுரத்தில் தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அப்போது திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் கட்சிகளில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியும் பேசிவந்தனர். அப்போது தவெகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர், காஞ்சிபுரத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடினோம். அப்போது நவம்பர் 13, 2025 அன்று ”காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகம் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்” என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசால் வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது.

அதில் காஞ்சிபுரத்தில் “அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்” 1971-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பட்டிருந்தது. மேலும் இதே போன்று தமிழ்நாட்டில் இதுவரை 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் நலத்திட்டங்கள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது
இது குறித்து மேலும் தேடிய போது, ABP ஊடகப்பக்கத்தில் “காஞ்சிபுரம் பட்டு கைத்தறி சங்கத்தின் புதிய விற்பனை நிலையம் திறப்பு: நவீன வசதிகளுடன் அசத்தல்!” என்ற தலைப்பில் பிப்ரவரி 02,2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் காஞ்சிபுரத்தில் கைத்தறி துறை சார்பில், அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நவீனமயமாக்கப்பட்ட புதிய விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, காஞ்சிபுரத்தில் இதுவரை நெசவாளர் கூட்டுறவு சங்கம் எதுவும் அமைக்கப்படவில்லை என பரவும் செய்திகள் தவறானவை. காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.