யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. புதியதலைமுறை ஊடகமும் இது தொடர்பான எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தனர்.
பரவிய செய்தி
திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

விரிவான விளக்கம்
2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரையைத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாக புதியதலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து புதியதலைமுறை ஊடகப்பக்கத்தில் தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படி எந்த செய்தியும் அங்கு வெளியாகவில்லை. இதையடுத்து அவர்களது சமூகவலைதளப்பக்கங்களிலும் இது குறித்து தேடியப் போது, இப்படியான எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளப்பக்கங்களில் இது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளாரா என்பதை தேடினோம். அதில் திமுக கூட்டணி குறித்து வெளியிட்ட எந்த பதிவும் இடம்பெறவில்லை.

மாறாக கடந்த 2021ஆம் ஆண்டு காவியத் தலைவன் என்ற பேஸ்புக் பக்கத்தில், ”திமுகவிற்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. நடிகர் ரஜினிகாந்த்..!” என்ற குறிப்பிட்டு இதே செய்தி பரவி வந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இது 2021ல் இருந்தே பரவி வந்தது தெளிவானது.

இதை மேலும் உறுதிச் செய்ய, புதியதலைமுறை ஊடகத்தை தொடர்புக் கொண்டு இது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது இது தொடர்பான எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தனர்.
முடிவு:
எனவே, பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.