யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சநே தகாயிசி (Sanae Takaichi), ஜனவரி 23, 2026 அன்று பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்கப் போவதாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் அவையில் கூறிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
இஸ்லாத்தை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது
ஹலால் படுகொலை, தொழுகைக்கான அழைப்புகள், பொது பிரார்த்தனை மற்றும் பெரிய மசூதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன
இஸ்லாம் மேற்கத்திய நாடுகளுக்குச் செய்ததை ஜப்பான் பார்த்திருக்கிறது,
தாமதமாகிவிடும் முன்பே வேண்டாம் என்று விழித்துக்கொண்ட ஜப்பான்

விரிவான விளக்கம்
இஸ்லாம் மதத்தை முற்றிலுமாக தடை செய்வது போன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🚨இஸ்லாத்தை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது 🇯🇵
ஹலால் படுகொலை, தொழுகைக்கான அழைப்புகள், பொது பிரார்த்தனை மற்றும் பெரிய மசூதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன 🚫
இஸ்லாம் மேற்கத்திய நாடுகளுக்குச் செய்ததை ஜப்பான் பார்த்திருக்கிறது,… pic.twitter.com/iuTbGxj30G
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது Al Arabiya English ஊடகத்தில் ஜனவரி 23, 2026 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஜப்பானிய நாடாளுமன்ற சபாநாயகர் ஒரு கடிதத்தைப் படித்து, சபையை அதிகாரப்பூர்வமாகக் கலைத்தார். அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரம்பரியமாக "பன்சாய்" என்ற பேரணி முழக்கத்தை எழுப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தேடிய போது, The Indian Express ஊடகத்தில் பரவி வரும் அதே வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதை பார்த்த போது, ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சநே தகாயிசி (Sanae Takaichi), ஜனவரி 23, 2026 அன்று பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்கப் போவதாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் அவையில் கூறிய போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.
இது குறித்து Global News, CNN-News18 போன்ற ஊடங்களில் வெளியான செய்தி ஆய்வு செய்து பார்த்த போதும், இது ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வீடியோ என்று தெரிந்தது.
இதையடுத்து இஸ்லாம் மதத்திற்கு எதிராக ஜப்பான் அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டதாக செய்திகளில் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து ஜப்பான் அரசியலமைப்பு சட்டத்தில் இஸ்லாம் மதத்தைத் தடை செய்துள்ளார்களா என்பதை அறிய, அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை படித்து பார்த்தோம். அதில் Article 20-ல் மத சுதந்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், "மதச் சுதந்திரம் அனைவருக்கும் உறுதி செய்யப்படுகிறது. எந்த ஒரு மத அமைப்பும் அரசிடமிருந்து சிறப்பு உரிமைகளைப் பெறக் கூடாது. எந்த அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தக் கூடாது. யாரையும் எந்த ஒரு மத நிகழ்விலும் கட்டாயப்படுத்திப் பங்கேற்க வைக்கக் கூடாது. அரசும் அதன் அமைப்புகளும் மதக் கல்வி மற்றும் மத செயல்பாடுகளில் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சநே தகாயிசி, ஜனவரி 23, 2026 அன்று பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்கப் போவதாக அறிவித்துள்ளதாக, அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் அவையில் கூறிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை, “இஸ்லாமியத்தை முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றிய போது எடுக்கப்பட்ட வீடியோ” என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.