யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அதிமுக தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுவதாகக் கூறி பரவி வரும் இந்த நியூஸ் கார்டு கடந்த 2021ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது.
பரவிய செய்தி
சமீபத்திய சர்வே விவரங்கள் சொல்லும் தகவல்: திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அதே நேரம் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். EPS for 2026. ADMK For 2026.
விரிவான விளக்கம்
2026ல் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கவுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள டைம்ஸ் நவ்-சி வோட்டர், ஏபிபி-சிவோட்டர், புதிய தலைமுறை, விகடன் உள்ளிட்ட பல கருத்துகணிப்புகளில் திமுகவை விட அதிமுகவிற்கு தான் அதிகபட்ச தொகுதிகளில் ஆதரவு இருப்பதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் அப்பதிவுகளில் “திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அதே நேரம் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2021ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிகிறது.
கடந்த 2021 ஏப்ரல் 10 அன்று “T.வீரன் குன்னத்தூர் எஸ் புதூர்” என்பவரது எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இதே நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2021-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அப்போதைய தேர்தலின் போது வைரலாக்கப்பட்ட கார்டு தான் இது என்பது தெளிவாகிறது. எனவே 2021ல் பரப்பப்பட்ட பழைய கார்டை, பலரும் தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் 2021-ல் வெளியிடப்பட்ட அப்போதைய டைம்ஸ் நவ்-சி வோட்டர், பிபி சி-வோட்டர், மற்றும் விகடன் போன்றவற்றின் கருத்துக் கணிப்புகளையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில், அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க தான், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்றே கருத்துகணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. எனவே பரவி வரும் நியூஸ்கார்டில் உள்ள தகவல்களும் தவறானவை.
முடிவு:
நம் தேடலில், 2024 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என கருத்துகணிப்புகள் கூறுகின்றன எனப் பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை அறிய முடிகிறது.