யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாஜக-அதிமுக கூட்டணி பிடிக்காமல், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் என்று கூறி 'நியூஸ் தமிழ்' ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
அன்வர் ராஜா விலகல் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா விலகுவதாக அறிவிப்பு பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
விரிவான விளக்கம்
ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஏப்ரல் 10 அன்று இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி பிடிக்காமல், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் என்று கூறி நியூஸ் தமிழ் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் அந்த நியூஸ் கார்டில், “அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா விலகுவதாக அறிவிப்பு; பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு;” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
கட்சியா...? சமூகமா...?
சமூகம் தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார் அன்வர் ராஜா.
அவர் கொண்ட சமூக
பற்றினில் நிலையாக உள்ளார்.
இதேபோன்று ஒவ்வொரு இந்துவும்
செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
செயல்படுவார்களா..??
மில்லியன் டாலர் கேள்வி.. !! pic.twitter.com/ySuKqveNz8
அன்வர் ராஜா விலகல்... இதுவரை பல நிர்வாகிகள் விலகி வருகிறார்கள்
பழனிச்சாமி பால் ஊத்திட்டார் 😁 pic.twitter.com/EZyacGs1W7
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது போலியான நியூஸ்கார்டு என்பதை அறிய முடிந்தது.
‘நியூஸ் தமிழ்’ ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், “அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா விலகுவதாக அறிவிப்பு பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு” என்று குறிப்பிட்டு எந்த நியூஸ்கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து அன்வர் ராஜாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் தேடினோம். இது குறித்து அவர் எந்த கருத்தையும் கூறவில்லை என்பது உறுதியானது.
எனவே இது போலி நியூஸ் கார்டு தானா என்பதை உறுதி செய்ய, நியூஸ் தமிழ் ஊடகத்திடம் இது குறித்து ஆய்வு செய்தோம். இது போலி நியூஸ் கார்டு தான், நியூஸ் தமிழ் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று நமக்கு உறுதி படுத்தினர்.

இதன் மூலம் பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜா பதவி விலகல் எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.