யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானதாகும். உண்மையான அறிக்கையில் அக்கட்சி திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் அதன் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் K.I.M.ஹக்கீம் வெளியிட்டதாக ஒரு அறிக்கை சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில், மம்தா பானர்ஜி-யின் ஒப்புதலுடன் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?
திரிணாமல் காங்கிரஸ் கட்சி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக செய்தி ஏதும் வெளியாகியிருக்கிறதா? என்று இணையத்தில் தேடினோம். ஆனால் அவ்வாறான செய்தி எதையும் காணமுடியவில்லை.
இதனைத் தொடர்ந்து திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் K.I.M. ஹக்கீமிடம் 'You Turn' சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக எவ்வித அறிக்கையையும் தாங்கள் வெளியிடவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் அந்த அறிக்கை ’போலியானது’ என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உண்மையான அறிக்கைகளையும் அனுப்பி வைத்தார்.

அதில் ஒரு மறுப்பு அறிக்கையும் இருந்தது. அதில், கட்சியின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி போலியான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உண்மையான அறிக்கையில், “கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வேலையும் செய்து வெற்றிக்கு உழைத்து வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் (2024) திமுக தலைமையான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி தர்மத்தின் படி வேலை செய்து வெற்றி பெற்றோம். நமது மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் 2வது முறையாக தொடர எங்களின் மூத்த சகோதரி மார்புமிகு மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வர் அவர்களின் ஒப்புதலோடு மற்றும் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி MP அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் நடைபெறும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எங்களது ஆதரவு தருகிறோம்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக பரப்பப்படும் அறிக்கை போலியானது என்பதை உறுதி செய்யமுடிகிறது.
முடிவு:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக பரப்பப்படும் அறிக்கை போலியானது. உண்மையான அறிக்கையில் அக்கட்சி திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
