யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2002ஆம் ஆண்டு குடியரசு தேர்தலில் திமுக அப்துல் கலாமுக்கு ஆதரவாகதான் வாக்களித்துள்ளது என்பது, 2007 குடியரசு தேர்தலில் அப்துல் கலாம் பேட்டியிட விரும்பவில்லை என்பதே உண்மை.
பரவிய செய்தி
‘2002ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில், அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக’ - எடப்பாடி பழனிச்சாமி.
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த மார்ச் 30ஆம் தேதி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பரப்புரையில் பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘2002ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில், அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக. ஆனால் அதிமுக தான் கலாமை ஆதரித்து வாக்களித்தது’ என்று கூறினார்.
உண்மை என்ன?
2002 குடியரசு தேர்தல் குறித்து இணையத்தில் தேடியபோது, ’ABP நாடு’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது.
கடந்த 2002ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார் பிரதமர் வாஜ்பாய்.

அப்போது, காங்கிரஸ் தலைமையிலான இருந்தபோது கூட திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அப்துல் கலாமை ஆதரித்தனர். 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசு தலைவரானார்.
மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அவரை பாராட்டி கலைஞர் அவர்கள் எழுதிய 'கவிதை’ அப்போதே பேசுபொருளானது. அதற்கு' நன்றி தெரிவித்து அப்துல்காம் அவர்களும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்துல்கலாமின் பதவிக்காலம் 2007ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்கும்பட்சத்தில் மீண்டும் குடியரசுத் தலைவராக இருக்க தயார் என அப்துல்கலாம் அறிவித்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருப்பினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த கட்சிகள், இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அப்துல் கலாமின் இந்த முடிவை ஆதரிக்காத நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரதீபா பாட்டிலை வேட்பாளராக களமிறங்கியது. இருப்பினும் அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், சமாஜ்வாதி ஆகிய மாநில கட்சிகள் இணைந்து அப்துல் கலாமை வேட்பாளராக முன்னிருத்த முயற்சி செய்தன. இருப்பினும் மற்ற கட்சிகள் ஆதரவு இல்லாததால் அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டார்.
மேலும், 2007ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் 2006 டிசம்பரில் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்த கருணாநிதி, ’மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திட்டமுள்ளதா?’ என கேட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் திட்டமில்லை என அப்துல்கலாம் கருணாநிதியிடம் கூறியாதாக தெரிவித்தார். அப்துல் கலாமின் இந்த முடிவுக்கு பிறகே கருணாநிதி, அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் நிறுத்திய பிரதீபா பாட்டிலை ஆதரித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் 2012ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக முன்னிருத்த மம்தா பானர்ஜி எடுத்துவரும் முயற்சிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியபோது, ”கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்றும் ஒரு பொருள் உண்டு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு திமுக ஆதரவளிக்கும் என கூறிவிட்டதால் அந்த நிலைப்பாட்டில் இருந்து திமுக பின் வாங்காது. முதலில் ஒருவரைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாற மாட்டோம்”என்று பதிலளித்தார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2002ஆம் ஆண்டு குடியரசு தேர்தலில் திமுக அப்துல் கலாமுக்கு ஆதரவாகதான் வாக்களித்துள்ளது என்பது, 2007 குடியரசு தேர்தலில் அப்துல் கலாம் பேட்டியிட விரும்பவில்லை என்பதால் தான் திமுக பிரதீபா பாட்டிலை ஆதரித்தது என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
2002ஆம் ஆண்டு குடியரசு தேர்தலில் திமுக அப்துல் கலாமுக்கு ஆதரவாகதான் வாக்களித்தது என்ற உண்மையை மறைத்து எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவலை பிரச்சாரம் செய்திருக்கிறார்.