யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர் மட்ட பாலம் கட்டும் திட்டத்தில் பல்வேறு காரணங்களால் ஒன்றிய அரசு தான் டெண்டர் கோரமால் தாமதித்து வந்துள்ளது.
பரவிய செய்தி
”தாம்பரத்திலிருந்து செங்கல்ப்பட்டு வரை உயர்மட்ட பாலம் கட்ட மத்திய அரசிடம் அனுமதி வாங்கினோம். திமுக அரசு இதனை கிடப்பில் போட்டுவிட்டது” - எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச் செயலாளர்.
விரிவான விளக்கம்
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, சென்னை ஆலந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக்காக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
அப்போது, ‘தாம்பரத்திலிருந்து செங்கல்ப்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக மத்திய அரசிடம் அதிமுக ஆட்சியில் இருந்த போது அனுமதி வாங்கினோம். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டத்தினை கிடப்பில் போட்டுவிட்டது’ என்று பேசினார்.
உண்மை என்ன?
தாம்பரம் முதல் செங்கல்ப்பட்டு வரையிலான உயர் மட்ட பாலம் குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் 2025 செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்த செய்தியைக் காண முடிந்தது.
அதன்படி, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையில் எப்போதும் அதிகமான வாகன நெரிசல் இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த சாலையில் இருபுறங்களில் 4 கி.மீ வரையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அளவிற்கும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

இதனைக் கணிக்கில் கொண்டு, 2018-ல், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை 30 கி.மீ. நீளமுள்ள மேம்பாலச் சாலையை அமைக்க முன்மொழிந்தது. இருப்பினும், சாத்தியக்கூறு, போக்குவரத்து மற்றும் சீரமைப்புப் பிரச்சினைகள் காரணமாக, இத்திட்டம் 18.4 கி.மீ. ஆகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, இந்த உயர்மட்ட மேம்பாலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் (KCBT) இருந்து தொடங்கி மஹிந்திரா சிட்டி சந்திப்புக்கு அருகிலுள்ள செட்டிப்புண்ணியம் வரை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான டெண்டர்கள் ஒன்றிய அரசால் கோரப்படவில்லை. விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படவுள்ளதால், இந்த உயர்மட்ட பாலத்தின் Entry, Exit முனைகள் விமானநிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.
ஆனால் விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கு 2025 செப்டம்பர் மாதம் தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அதனால் தான் ஒன்றிய இத்திட்டத்திற்காக அதுவரை டெண்டர் விடாமல் இருந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர் மட்ட பாலம் கட்டும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போடவில்லை, பல்வேறு காரணங்களால் ஒன்றிய அரசு தான் இத்திட்டத்திற்கான டெண்டர் கோரமால் இருந்துள்ளது என்பது தெரிவாக தெரியவருகிறது.
முடிவு:
அதிமுக ஆட்சியில் முன்மொழியப்பட்ட தாம்பரம் - செங்கல்பட்டு வரையிலான உயர் மட்ட பாலம் கட்டும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தவறாக தகவலை பரப்புகிறார்கள்.