யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ டிசம்பர் 05, 2025ஆம் ஆண்டு, துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத் தேர் இழுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். அப்போது தேர் வெள்ளோட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட யானை மற்றும் ஒட்டகங்களை துர்கா ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார்.
பரவிய செய்தி
ஒட்டகத்திற்கும் ஒட்டகத்திற்கும் கல்யாணம் பண்ணிவச்சா திராவிட மாடல் 2.0 மலருமாம்...
ஆமா ஸ்டாலின் சார் யாரு உங்க கொள்கைத் தலைவர்?

விரிவான விளக்கம்
சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 04ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் ஒட்டகத்திற்கு திருமணம் செய்து வைத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது டிசம்பர் 05, 2025 அன்று ABP Nadu ஊடகத்தில், “காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் சரியாக 1:43வது நிமிடத்தில் பரவி வரும் காட்சிகள் இருந்ததை பார்க்கமுடிந்தது.
அதில் துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத் தேர் இழுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். அப்போது தேர் வெள்ளோட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட யானை மற்றும் ஒட்டகங்களை துர்கா ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த காட்சிகளை தான் தற்போது ஒட்டங்களுக்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின் என்று தவறாக பரப்புகின்றனர்.
இதையடுத்து ஒட்டகங்களை வைத்து தமிழ்நாட்டில் பூஜை நடத்தப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். அப்போது Lokal App ஊடகத்தில், ”ஒட்டக பூஜை வழிபாடு” என்ற தலைப்பில் மே 15, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாதசுவாமி கோவிலில் தேவஸ்தானத்தில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பூஜை அஸ்வ பூஜை ஒட்டக பூஜை செய்து வழிபட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, பரவி வரும் வீடியோ டிசம்பர் 05, 2025ஆம் ஆண்டு, துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத் தேர் இழுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். இதை திமுக வெற்றி பெற வேண்டும் என ஒட்டகத்திற்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.