யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில் இருக்கக்கூடிய பாலம் சீனாவில் அமைந்துள்ளது. இதனை ஜம்மு முதல் பனிஹால் வரை அமைந்த தேசிய நெடுஞ்சாலை-44 எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியிலிருந்து பாஜக விலகிய பிறகு, 2018 ஜூன் மாதம் அம்மாநிலச் சட்டசபை முடக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. பிறகு அம்மாநிலத்துக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலமும் ஜம்மு-காஷ்மீர் (சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம்), லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு முதல் பனிஹால் வரை அமைக்கப்பட்ட பாலம் என வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
தேசிய நெடுஞ்சாலை-44 இந்தியாவில் மிக நீளமான நெடுஞ்சாலையாகும். பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில், அது ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பாலம் அல்ல என்பதை அறியமுடிந்தது.
சீனாவைச் சேர்ந்த ’People's Daily’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோ 2021ஆம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. சீனாவின் க்வைசோ (Guizhou) - யுன்னான் Yunnan என்ற மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான பாலமாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெய்பான்ஜியாங் (Beipanjiang) கிராண்ட் பள்ளத்தாக்கிலிருந்து 565.4 மீட்டர் உயரத்தில் இந்த 'Duge Bridge' அமைந்துள்ளது. 1,341 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் பெய்பான்ஜியாங் கிராண்ட் பள்ளத்தாக்கிலிருந்து 565.4 மீட்டர் உயரத்தில் கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Hangzhou நகரையும் Yunnan மாகாணத்தில் Ruili நகரையும் இணைக்கிறது. உலகின் மிக உயரமான பாலமாக உள்ள இது 2016ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இப்பாலம் தொடர்பான செய்திகளை வேறு சில தளங்களிலும் காணமுடிகிறது.

சீனாவில் உள்ள இந்த பாலத்தைத்தான் ஜம்மு-காஷ்மீரில் இருப்பதாகத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
முடிவு:
ஜம்மி-காஷ்மீரில் அமைந்துள்ள பாலம் எனப் பரவக் கூடிய வீடியோ குறித்த தகவல் தவறானது. இந்த பாலம் சீனாவில் அமைந்துள்ளது.
