யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய்
விரிவான விளக்கம்
கேரளாவின் வயநாட்டில் பெய்த தொடா் கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக்கிராமங்கள் உருக்குலைந்தன. இதுவரை 1,500 க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 250 ஆக உயர்ந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்... 💔😢🐕 pic.twitter.com/66bfbWNFPg
— ᴛ.ʀᴜʙɪɴ (மோடியின் குடும்பம்) (@Rubin_tn) July 31, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது தற்போது ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே, சமூக ஊடகங்களில் இது வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

‘The Weather Network’ என்ற பக்கத்தில், “நாயும் அதன் குட்டிகளும் பல நாட்களாக நிலச்சரிவில் சிக்கியிருந்த நிலையில் இறுதியாக விடுவிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.

எனவே இதுகுறித்து மேலும் ஆய்வுசெய்து பார்த்தோம். 'The News Minute' ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு “கேரளாவில் ஏற்பட்ட சிறிய நிலச்சரிவில் புதையுண்ட நாய் மற்றும் குட்டிகள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன” என்ற தலைப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சிறிய நிலச்சரிவில் நாயும் அதன் இரண்டு குட்டிகளும் சேற்றில் புதைந்தன. குமரநெல்லூர் காஞ்சிரத்தாணி அருகே பாலக்காடு - மலப்புரம் மாவட்ட எல்லை கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவை மீட்கப்பட்டன. நாய்களை சேற்றில் இருந்து மீட்க விலங்குகள் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் இது வயநாடு நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும், கடந்த 2021ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் வீடியோ, கடந்த 2021ஆம் ஆண்டில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறியமுடிகிறது.
