யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
RLC அமைப்பு, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும் அதிக வன்முறைகளும் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு எட்டாவது இடத்தில் உள்ளது.
பரவிய செய்தி
கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம்
விரிவான விளக்கம்
கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தவெக நிர்வாகி ஒருவர் தனியார் செய்தி தொலைகாட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, மத ரீதியான வன்முறைகள் குறித்து அரசு தரப்பில் ஏதாவது தரவுகள் அல்லது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடினோம். அரசு தரப்பில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து எந்த தரவுகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
இது தொடர்பாக மேலும் தேடியதில் “RELIGIOUS LIBERTY COMMISSION OF EVANGELICAL FELLOWSHIP OF INDIA” என்ற அமைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கை கிடைத்தது. அதன்படி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும் அதிக வன்முறைகளும் கொண்ட மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 188 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அதற்கு அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. சத்தீஸ்கரில் 150 சம்பவங்களும், ராஜஸ்தானில் 40 சம்பவங்களும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன.
தமிழ்நாடு இதில் எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 27 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மேலும் அந்த அறிக்கையில் எந்த வகையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் பட்டியலிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவிலேயே கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இருப்பதாகக் கூறி தவெகவைச் சேர்ந்த நபர் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.
முடிவு:
நம் தேடலில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.