யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படம் 2017ஆம் ஆண்டில் செங்கோட்டையன் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவர் செங்கோட்டையன். அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் ‘அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் எடப்பாடி தொடங்க வேண்டும்’ என்று கெடு விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் 2025 செப்டம்பர் மாதம் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், செங்கோட்டையன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நடத்தியது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ‘செங்கோட்டையன் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோது அவர் பாஜகவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார்’ என்று திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
மன நிம்மதியை தேடி சென்ற செங்க்ஸ் 😳 pic.twitter.com/gu5G3kreP9
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, ‘வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின்' அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்' பக்கத்தில் இந்த புகைப்படத்தை காணமுடிந்தது.
Shri K. A. Sengottaiyan, Minister for School Education, Govt of Tamil Nadu calls on Smt @nsitharaman pic.twitter.com/5Ej1BjN9gh
இந்தப் புகைப்படம் ‘வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின்' பக்கத்தில் 2017 ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அப்போது அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக சொல்லப்படும் இந்த புகைப்படம் 2017ஆம் ஆண்டு, அதாவது 8 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது.
முடிவு:
8 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு எடப்பாடி தலைமை மீது அதிருப்தியில் இருந்தபோது, செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தவறாக பரப்பப்படுகிறது.