யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாலியல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டததை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமே ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2024 டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாடு முழுவதும் விவாதமாக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக நிர்வாகி என்று பாஜக போன்ற கட்சிகள் சொல்லிவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை திமுக அரசு ரத்து செய்யப்பட்டதாக ஒரு News Card சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
வேற லெவல் திமுக ஆட்சி தீய சக்தி என்று மீண்டும் மீண்டும் நிரூபணம் 💦 pic.twitter.com/NTOu374YcE
உண்மை என்ன?
பரப்பப்படும் News Card-ல் இந்த செய்தி 2025 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தேடிய போது ‘தினமணி’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது.

அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட போது அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஞானசேகரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஜூன் 2ஆம் தேதி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக நீதிமன்றம் தீர்பளித்தது. பாலியல் குற்ற வழக்கில், ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அவர் மீது மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது, அவரது குற்றச் செயல்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் வாதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமே ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தது என்பதே உண்மை.
முடிவு:
திமுக அரசு ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
