YouTurn

வேதாந்தா குழுமத்திடம் இருந்து திமுக பணம் பெற்றதாக சீமான் சொன்ன பொய்!

வேதாந்தா குழுமத்திடம் இருந்து திமுக பணம் பெற்றதாக சீமான் சொன்ன பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தேர்தல் பத்திரம் மூலம் வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் பெற்றுள்ளது. - சீமான்


Video link

விரிவான விளக்கம்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் ரொவீனா ரூத் ஜேன்னை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் 30ம் தேதி பிரச்சாரம் செய்துள்ளார். 



பிரச்சாரத்தில் சீமான் பேசும் போது, ”இந்த ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திடம் தேர்தல் பத்திரம் மூலம் திமுக காசு வாங்கியுள்ளதா? இல்லையா? வேதாந்தா குழுமத்திடம் அனில் அகர்வாலிடம் காசு வாங்கியவன் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இருப்பானா? உனக்கு ஆதரவாக இருப்பானா?” என்று பேசியுள்ளார்.

சீமான் பேசிய இதே தகவலை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகனும் தனது எக்ஸ் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்டுள்ளார். 



உண்மை என்ன? 

மே 22, 2018ல் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர். இத்தகைய நிறுவனத்திடம் இருந்துதான் திமுக தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றதாக சீமான் பேசியுள்ளார். 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. அத்தரவுகள் வெளியான போதே அதிக அளவில் தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கியுள்ளது என்கிற விவரத்தை பகுப்பாய்வு செய்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதில் ரூ.402.4 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய வேதாந்தா நிறுவனம் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். அப்படி வேதாந்தா குழுமம் வாங்கிய பத்திரத்தில் அதிகபட்சமாக பாஜவிற்கு ரூ.230 கோடியும் காங்கிரசுக்கு ரூ.125 கோடியும் சென்றுள்ளது. 



இதனைத்தவிர வேறு சில கட்சிகளுக்கும் தேர்தல் பத்திரம் மூலம் வேதாந்தா குழுமம் பணம் வழங்கியுள்ளது. ஆனால், திமுகவிற்கு பத்திரம் மூலம் எந்த பணமும் வழங்கவில்லை.

எஸ்.பி.ஐ.-யின் இந்த தகவல் வெளியாவதற்கு முன்னர் சில அரசியல் கட்சிகளும், தங்கள் கட்சி எந்தெந்த நிறுவனத்திடம் எவ்வளவு பணம் பெற்றது என்கிற தகவலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அதிலும் திமுக வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக எந்த குறிப்பும் இல்லை. 

மேலும், தேதிவாரியாக நிறுவனங்கள் வாங்கிய பத்திரங்கள் மற்றும் கட்சிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பத்திரம் தொடர்பான விவரத்தை இரண்டு தனித்தனி பட்டியலாக எஸ்.பி.ஐ. வெளியிட்டிருந்தது. அதை பகுப்பாய்வு செய்து திமுக தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்ற நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வேதாந்தா குழுமம் இல்லை. 

இவற்றில் இருந்து வேதாந்தா குழுமத்திடம் தேர்தல் பத்திரம் மூலம் திமுக பணம் பெற்றதாக சீமான் பேசியது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் இது தொடர்பாக ஒரு பட்டிலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட போதே, இது போலியாக உருவாக்கப்பட்ட பட்டியல் என யூடர்ன் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அதே பொய்யை சீமானும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். 

இதேபோல் ஸ்டெர்லைட் திறக்க வேண்டுமென அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும், அந்நிறுவனத்திற்கு எதிரான வாதங்களையே  தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் முன்வைத்துள்ளார். 

மேலும், இந்நிறுவனத்தை மூடியது சரிதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் ’உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது’ என்றுதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், திமுக வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் விதமாக அந்த வீடியோவில் சீமான் பேசியுள்ளார். 



தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்திடம், நான் சொல்லி எனது கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என சீமான் கூறியது தொடர்பாக முன்னரே விளக்கமாக யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ஸ்டெர்லைட்-க்கு எதிராக நான் போராட சொல்லவில்லை: சீமான் பல்டி.. ஆதாரங்கள் இதோ !

முடிவு : 

வேதாந்தா குழுமத்திடம் தேர்தல் பத்திரம் மூலம் திமுக பணம் பெற்றதாக சீமான் சொன்ன தகவல் உண்மை அல்ல. எஸ்.பி.ஐ. வெளியிட்ட தரவின்படி வேதாந்தாவிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் திமுக பணம் பெறவில்லை என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க