யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மின்சார அடுப்பு வழங்கியுள்ளார்.
பரவிய செய்தி
முஸ்லிம்களுக்கும் தீபாவளிக்கும் என்னடா சம்பந்தம்..? சனாதனத்தை ஒழிக்க முஸ்லிம்களுக்கு தீபாவளி பட்டாசு - பரிசு வழங்கிய ஓங்கோல் இளவரசர்..!

விரிவான விளக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி உதயநிதி ஸ்டாலின் முஸ்லிம்களுக்குப் பட்டாசுப் பெட்டி வழங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் ’ANI’ லோகோ இருப்பதைக் காணமுடிகிறது. இதனைக்கொண்டு தேடியதில், கடந்த 23ஆம் தேதி இதே வீடியோவுடன் 'ANI' தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், திமுகவின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயநிதியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களிலும் நலத்திட்டம் வழங்கியது தொடர்பான பதிவுகளைக் காணமுடிந்தது. மக்களுக்கு வழங்கக்கூடிய பெட்டியில் ‘Pigeon - Induction Cooktop’ என்று உள்ளது. அந்த பெட்டியில் இருப்பது பட்டாசு கிடையாது. அது மின்சார அடுப்பு.
கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மின்சார அடுப்பை வழங்கியுள்ளார். அதுவும் எந்த மத பாகுபாடும் இன்றி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை மத பிரிவினை ஏற்படுத்தும் விதத்தில் திரித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர்.

இதற்கு முன்னர் பொங்கல் பண்டிகையின்போது திமுக கட்சியின் சார்பில் சேப்பாக்கம் பகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு பை உதயநிதியால் வழங்கப்பட்டது. கட்சி சார்பில் வழங்கப்பட்ட பையில் திமுகவின் உதயசூரியன் சின்னம் இடம்பெற்று இருந்தது. ஆனால், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பையில் திமுக சின்னம் இருப்பதாகச் சீமான் செய்தியாளர் சந்திப்பில் தவறான தகவலைப் பேசினார். அது குறித்த உண்மையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் உதயநிதி கொடுத்த அரசு பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னம் என சீமான் பேசிய தவறான தகவல்!
முடிவு:
முஸ்லிம்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பட்டாசுப் பெட்டியைப் பரிசாக வழங்கியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது மின்சார அடுப்பு. திமுக-வின் பவள விழாவையொட்டி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி மக்களுக்கு வழங்கியுள்ளார். இது அனைத்து மதத்தினருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி வழங்கப்பட்டுள்ளது.