யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. அதன்படி உத்தரப்பிரதேச அரசு 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதித்துள்ளது. இந்த நேரக்கட்டுப்பாடுகள் குஜராத், மேற்குவங்கம், கேரளா உட்பட பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
பரவிய செய்தி
என் பண்டிகை என் உரிமை. வரும் 2026 தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி அமைந்த உடன் இந்த கட்டுப்பாடுகள் இன்றி பட்டாசு வெடித்து நம் பண்டிகையை கொண்டாடுவோம்! ஹிந்து துரோஹி அறிவாலயம் அரசு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!
விரிவான விளக்கம்
பொதுவாக தீபாவளி பண்டிகை அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரங்களில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் “தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்துக்களுக்கு எதிரான இந்த நடைமுறை மாறும்” என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் சிலர் இந்த நேரக் கட்டுப்பட்டை, தமிழ்நாடு அரசு மட்டுமே நிர்ணயித்துள்ளது என்பது போன்றும், புதிய தலைமுறை வெளியிட்டுள்ள நியூஸ் கார்டை குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை “விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்” என்று குறிப்பிட்டு அக்டோபர் 14, 2025 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan
(1/2) pic.twitter.com/glZ9EDHVCc
அதில், “பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
மேலும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும். இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும்பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது, மற்ற மாநிலங்களிலும் இந்த அறிவிப்பு வெளியாகிறது. அதன்படி உத்தரப்பிரதேச அரசு 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதித்துள்ளது. அதன்படி, இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.
இந்த நேரக்கட்டுப்பாடுகள் குஜராத், மேற்குவங்கம், கேரளா உட்பட பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முடிவு:
நம் தேடலில், தீபாவளி பண்டிகையன்று தமிழ்நாட்டில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நிர்ணயம் செய்வதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த 2018-ல் இருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றன.