யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜனவரி 19 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திருச்சி: ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது.
விரிவான விளக்கம்
திருச்சியில் புதிதாக ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி ஒன்று இடிந்து விழுந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பத்திவுகளில் “முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போதே இடிந்து விழுந்தது“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “தினகரன்“ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் அதே புகைப்படத்தில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
ஜனவரி 21, 2025 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியின் விளக்கத்தில் “ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் குஜராத் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியதில், NDTV ஊடகப் பக்கத்தில் “சூரத்தில் புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத்தொட்டி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறை ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஜனவரி 19 அன்று, வழக்கமான கொள்ளளவு சோதனைக்காக சூரத்தில் அமைந்துள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட 15 மீட்டர் உயர நீர் தொட்டியை பொறியாளர்கள் தண்ணீரால் நிரப்பியபோது, சில நிமிடங்களில், 9 லட்சம் லிட்டர் தண்ணீரும் கொட்டி பாலம் சிதைந்தது“ என்றும் அதில் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் ஜனவரி 19 அன்று "குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது" என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள தினகரன் செய்தியை, எடிட் செய்து "திருச்சி" என்று மாற்றி தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், திருச்சி: ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்ததாகப் பரவும் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததல்ல. குஜராத் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.