யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கேட்டு போடப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. அவற்றின் மீது தீர்ப்பளிக்கப்படும் வரை 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புதான் அமளில் இருக்கும்.
பரவிய செய்தி
கேரளாவை சேர்ந்த சினு ஜோசப் என்கிற இந்த பெண் ஆராய்ச்சியாளர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாததற்கான காரணத்தை ஆராய்ந்து கூறியுள்ளார். இவரது கூற்றை உச்ச நீதிமன்றம் ஏற்று கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த செய்தியை இந்துக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.

விரிவான விளக்கம்
சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைவதிலிருந்து பெண்கள் விலக்கி வைக்கப்படும் வழக்கம் அரசியலமைப்பிற்கு எதிராக இருக்கிறது என்று தொடரப்பட்ட வழக்கில், 2018 ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலைமைப்பு அமர்வு, ’சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. எல்லா வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம்’ என்ற தீர்ப்பை 4:1 பெரும்பான்மையில் வழக்கியது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கேட்டு 50க்கும் மேற்பட்ட மனுக்கள் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சினு ஜோசப் என்பவர் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாததற்கான ’அறிவியல்பூர்வமான’ காரணத்தை விளக்குவதாகவும், அந்த விளக்கம் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருந்ததாகவும் பதிவிட்டு, வீடியோ ஒன்று ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ”SC to freeze their judgement in favour of women’s entry to Sabarimala Temple” என்ற தலைப்பில், சபரிமலையில் பெண்கள் விலக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை விளக்கி சினு ஜோசப் உரையாற்றும் யூட்யூப் வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது.

இந்த வீடியோவில், ”மதவிடாய் போக்கு ஏற்படும் வயதுள்ள பெண்கள் (women of menstrual age group) சபரிமலைக்கு சென்றால் அவர்களது மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் ஏற்படும். அவர்களது மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு PCOD, Endometriosis போன்ற தீவிரமான நோய்கள் ஏற்படும்” என்று பேசியிருக்கிறார் சினு ஜோசப். மேலும், பெண்கள் சபரிமலையில் நுழைவதில் இருந்து விலக்கப்பட்டிருப்பது அவர்களது மாதவிடாய் அரோக்கியத்தை கணக்கில் கொண்டுதான் என்கிறார். ”பெண்களும் சபரிமலையும்: கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல்” என்ற தலைப்பில் இதுபற்றி அவர் புத்தகம் எழுதிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், சினு ஜோசப்-ன் இந்த உரையைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கும் ’ஜன்மபூமி’ என்ற மலையாள இணையப் பத்திரிகை, ’இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அறிவியல் கருத்துகள், பெண்கள் சபரிமலையில் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பதில் முக்கிய பங்காற்றியதாக’ குறிப்பிடுகிறது.

இதுபற்றி ’Supreme Court Observer’ என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ’சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கேட்டு போடப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. அவற்றின் மீது தீர்ப்பளிக்கப்படும் வரை 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே அமளில் இருக்கும்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது தெரியவருகிறது.

மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அதிகாரப்பூர்வமான வலைதளத்தில், ’Endometriosis’ என்பது கருப்பைக்கு (uterus) வெளிய வளரக்கூடிய திசுக்களால் ஏற்படுவது என்றும், இந்த நோய் வருவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. Endometriosis நோய்க்கான காரணம் உலக சுகாதார நிறுவனத்திற்கே தெரியாத ஒன்றாக இருக்கும் நிலையில், சபரிமலைக்கு பெண்கள் செல்வதால் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக சினு ஜோசப் சொல்வது அறிவியல் பூர்வமானதல்ல.
எனவே சினு ஜோசப்-ன் இந்தப் பேச்சு ”உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது” என்பது வெறும் ஊகம் மட்டுமே. அதேபோல், சினு ஜோசப்-ன் அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கொண்டு, ‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும்’ உச்சநீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைத்திருப்பதாக ’ஜன்மபூமி’ பத்திரிகை மூலமாக பரப்பப்படும் தகவலும் தவறானதாகும். மறு பரிசீலனை தீர்ப்பு வரும் வரையில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே அமளில் இருக்கும்.
முடிவு:
சினு ஜோசப்-ன் கருத்துகள் ”உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது” என்பது வெறும் ஊகம் மட்டுமே. அதே வேளையில் இந்த கருத்துகள், ‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும்’ தீர்ப்பை நிறுத்திவைக்கும் அளவிற்கு முக்கியப் பங்காற்றி இருப்பதாக ’ஜன்மபூமி’ பத்திரிகை மூலமாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். ஏனெனில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பின் மீதான மறுபரிசீலனை மனுக்கள் நிலுவையில் உள்ள வரை, 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே அமளில் இருக்கும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறுயுள்ளது.