யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது உண்மையே. ஆனால் நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வ.களத்தூரிலும் 1951 ஆம் ஆண்டில் இருந்தே அங்குள்ள இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
பரவிய செய்தி
கோயம்புத்தூர் மதக்கலவரம் திமுக ஆட்சியில். நாகூர் கலவரம் மற்றும் வி.களத்தூர் கலவரங்களும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.
விரிவான விளக்கம்
சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளிலும், பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அதிமுகவைச் சேர்ந்த ஜவகர் அலி, “கோயம்புத்தூர் மதக்கலவரம் திமுக ஆட்சியில்; நாகூர் கலவரம் மற்றும் வி.களத்தூர் கலவரங்களும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது குறித்து நாம் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி, 1997 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் கலவரம் ஏற்பட்டது திமுக ஆட்சியில் தான் என்பது உண்மையே என்பதை உறுதி படுத்த முடிந்தது.
இதைத் தொடர்ந்து நாகூர் கலவரம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில் என்பதை அறிய முடிந்தது. இது குறித்த அறிக்கையை பேரா அ.மார்க்ஸ் (தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), வழக்குரைஞர் தய்.கந்தசாமி, (தலித் பண்பாட்டுப் பேரவை) உள்ளிட்ட பலர் அடங்கிய குழு வெளியிட்டிருந்தனர். இது குறித்த அறிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டுள்ளது.
இதே போன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வ.களத்தூரிலும் 1951 ஆம் ஆண்டில் இருந்தே அங்குள்ள இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே பிரச்சினை நீடித்து வருகிறது என்பதை செய்திகளின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டில் வ.களத்தூர் கலவரம் குறித்து மற்றொரு இணையதளப் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன மூலம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே அங்கு கலவரங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இந்நிலையில் திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதாகக் கூறி தவறான தகவலை திரித்துப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.