யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இங்கிலாந்தில் உள்ள ஒரு நதியில் 84 கனசதுரங்களும் (Cubes ) இந்து சமய வழிபாட்டு பிரார்த்தனை தொடர்பான தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் காணப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் அவை...
பரவிய செய்தி
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரகக் கருவிகளை மீனவர்கள் இங்கிலாந்தில் ஆற்றின் ஆழத்தில் கண்டெடுத்துள்ளனர்.

விரிவான விளக்கம்
இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து மீனவர்கள் 60 கன நவக்கிரக யந்திரங்களை கண்டுபிடித்ததாகவும், அதில் இந்திய மொழியில் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இவை 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறி 0:43 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவிவரும் வீடியோ தகவல் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், The Hindu இணையதளப்பக்கத்தில் ஜுன் 14, 2020 அன்று "தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஈய உலோக கனசதுரங்கள் ( Lead Cubes) எவ்வாறு இங்கிலாந்து நதியில் கண்டெடுக்கப்பட்டன ?" என்றொரு கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
அக்கட்டுரையில், "கனசதுரங்கள் தோராயமாக 125 கிராம் எடையும் 2 செ.மீ நீளமும் கொண்டவை. தேவநாகரி எழுத்துகளைக் கொண்ட இவை மாயாஜால கனசதுரங்கள் என்றும், 'ராகு தோஷ' பிரார்த்தனை தொடர்பான 'ராகு யந்திரங்கள்' என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த கனசதுரங்களோடு சில நாணயங்களும் கிடைத்ததாகவும், அப்படி கிடைத்த நாணயம் ஒன்றில் ஒருபுறம் துர்கை கடவுளும் மறுபுறம் 'ஸ்ரீ' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தேவநாகரி எழுத்துகள் இருப்பதால், இந்த கனசதுரங்கள் கி.பி 11 அல்லது 12ஆம் நூற்றாண்டை விட பழமையானதாக இருக்கமுடியாது." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், மற்றவை 2p நாணயங்கள். 2p நாணயங்கள் என்றால் 1 பிரிட்டிஷ் பவுண்டில் நூறில் இரண்டு பங்கு (2/100) , அதாவது இந்திய நாயணங்கள் கணக்கில் இரண்டு பைசா என்பதுதான் பிரிட்டிஷ் நாணய கணக்கில் 2p (2 pence). இந்த நாணயங்கள் 1981ஆம் ஆண்டு அச்சிடப்பட்டவை என்று தெரியவருகிறது. எனவே அவை 1981க்குப் பிறகுதான் ஆற்றில் வீசப்பட்டிருக்க முடியும் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தேடியதில் coventrytelegraph என்ற இணையதளப்பக்கத்தில் மே 12, 2020 அன்று ஒரு கட்டுரை பதிவு செய்திருப்பதை கவனித்தோம். இந்த கனசதுரங்கள் கோவென்ட்ரி நதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை இந்து மத பிரார்த்தனை சடங்குடன் தொடர்புடையவை என்றும் அதில் கூறப்பட்டிள்ளது.

மேலும் 14, மே 2020 அன்று ‘Popular Mechanics இணையதளத்தில் வெளியான கட்டுரையிலும் இதே தகவலைத்தான் குறிப்பிட்டிருந்தனர்.

முடிவு :
இங்கிலாந்தில் உள்ள ஒரு நதியில் 84 கனசதுரங்களும் இந்து சமய வழிபாட்டு பிரார்த்தனை தொடர்பான தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் காணப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் அவை 6000 ஆண்டுகள் பழமையானவை என்பது உண்மையான தகவல் அல்ல. அவை 1981 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்கிடையில் வீசப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது.