யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’ஜமியத் உலமா-இ-ஹிந்த்’ நடத்திய ‘அரசியலமைப்பைப் பாதுகாப்போம்’ என்ற மாநாட்டில், வக்ஃப் நிலங்கள், மதச்சார்பின்மை, பொது சிவில் சட்டம், இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஆகியவை பற்றி பேசினர்.
பரவிய செய்தி
இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் வக்பு வாரியத்திற்காக திரண்ட முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள், இனிமேலாவது உங்கள் கண்கள் திறக்கட்டும். ஹிந்துக்களே தூங்கிக் கொண்டே இருங்கள், எல்லாவற்றையும் யோகி மோடி செய்வார் என்று. ஒரு பட்டனை அழுத்தினால் கூட, மின்சாரம் மற்றும் தண்ணீரை சிரமமின்றிப் பெற வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் இன்னும் க்ஷத்திரிய பிராமண வைஷ்ய சூத்திரரை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீர்கள், இப்போதாவது உங்கள் கண்களையும் மந்தமான மனதையும் திறந்து பாருங்கள்.!!

விரிவான விளக்கம்
நமது 'YouTurn’ தளத்திற்கு வாசகர் ஒருவரிடமிருந்து ’குறிப்பிட்ட ஒரு தகவலை fact check செய்யக் கோரி’ மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதில் ”இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் வக்பு வாரியத்திற்காக திரண்ட முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள்” என்று எழுதப்பட்டு, திரளாக முஸ்லிம் மக்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றை காட்சிபடுத்தும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது. ’தங்கள் நலனை முன்னிட்டு முஸ்லிம்கள் இப்படி கூடுவதைப் போல இந்துக்கள் கூட்டம் கூடும் வகையில் விழிப்புணர்வு அடையவில்லை’ என்று பொருள்படும் வகையில் மதப்பிரிவினைவாத கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தது. இதே தகவல் சமூக வலைதளமான ’எக்ஸ்’ தளத்திலும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
நமது வாசகர் அனுப்பிய வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், அதனையொத்த வேறொரு வீடியோ ’md____shoaib_qasmi’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணக்கிடைத்தது. இது கடந்த நவம்பர் 10ஆம் தேதி பதிவிடப்பட்டிருக்கிறது.

இந்த சிறுவீடியோவின் ஒரு Frame -மில் ‘Save Constitution convention’ என்று எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இதனை keywords -ஆகக் கொண்டு இணையத்தில் தேடியதில், Arshad Madani என்ற முஸ்லிம் தலைவரின் பெயரில் இயங்கிவரும் ஒரு வலைதளத்தில், ’ஜமியத் உலமா-இ-ஹிந்த்’ நடத்திய ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் மாநாட்டைப் பற்றி செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதன் தலைப்பே “வக்ஃப் நிலங்கள் மதச்சார்பின்மை, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை காக்க உறுதியேற்போம்” என்றுதான் உள்ளது.

மேலும் அதில், இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டு, ”இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதையும், வக்ஃப் திருத்த மசோதா, தெய்வ நிந்தனைச் சட்டங்கள், தனிநபர் சட்டங்களில் தலையிடுதல், சிறுபான்மையினர் மற்றும் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘The Hindu’ இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியில், ’தெலுகு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளால் தான் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆதலால், இந்த கட்சிகளின் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளில் இருந்து நழுவமுடியாது. மேலும், வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினையில் முஸ்லீம் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டும். அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று இந்த மாநாட்டில் மௌலானா அர்ஷத் மதனி பேசியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த மாநாட்டில், கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டாலே போதுமானதாக இருக்குமென்றும், 2024 வக்ஃப் திருத்த மசோதாவை நிராகரிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பொது சிவில் சட்டம், இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து பார்க்கும்போது, ’அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் பல்வேறு விஷயங்களும் பேசப்பட்டுள்ளது. இதில் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதனைத் திரித்து ‘வக்பு வாரியத்திற்காகவே’ முஸ்லிம்கள் திரண்டார்கள் என்று பரப்பப்படுகிறது. மேலும், முஸ்லிம்கள் கூட்டம் கூடுகிறார்கள் இந்துகள் விழித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வது, அப்பட்டமாக மதப்பிரிவினையை தூண்டும் செயலாகும்.
முடிவு:
இந்த கூட்டம் வக்ஃப் வாரியத்திற்காக கூடியது என்று சொல்வது திரித்து பரப்பப்படுவதாகும். ஜமியத் உலமா-இ-ஹிந்த்’ நடத்திய ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற மாநாட்டில் கூடிய கூட்டம் இது. இந்த மாநாட்டில் வக்ஃப் திருத்த மசோதாவைப் பற்றியும் பேசப்பட்டது.