யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் இலவச பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டு தாழ்வாக பேசிய உண்மைதான். அதற்கு தெளிவான வீடியோ ஆதாரம் உள்ளது.
பரவிய செய்தி
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @CVShanmugamofl அவர்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த News Card முற்றிலும் போலியானது. விஷமத்தனமான நோக்கத்தோடு இந்த கார்டை உருவாக்கி, பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

விரிவான விளக்கம்
வருகின்ற 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் அனைத்து தேர்தல் கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் பூத் கமிட்டி கூட்டம் போன்ற கட்சி அமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி விழுப்புரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக MPயான சி.வி சண்முகம், 'இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும், ஓட்டு போட்டால் இலவசமாக கொடுப்பாங்க' என்று பேசியதாக ‘தினகரன்’ ஊடகம் செய்தி வெளியிட்டது.
ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம்: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு#CVShanmugam #AIADMK #DinakaranNews https://t.co/UVDbBiQGzR pic.twitter.com/nuewjG6C1I
ஆனால், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் அவ்வாறு எதையும் சொல்லவில்லை என்றும் அதிமுகவிற்கு கலங்கம் ஏற்படுத்த இவ்வாறு பொய்யான செய்தி பரப்பப்படுவதாகவும் அதிமுகவின் ‘தகவல் தொழில்நுட்ப அணி’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
#FakeNewsAlert
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @CVShanmugamofl அவர்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த News Card முற்றிலும் போலியானது.
விஷமத்தனமான நோக்கத்தோடு இந்த கார்டை உருவாக்கி, பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை… pic.twitter.com/3BWlyQmPTo
உண்மை என்ன?
இது குறித்து ‘சி.வி.சண்முகத்தின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சு’ என்ற keywords கொண்டு தேடியதில், ’சன் நியூஸ்’ செய்தித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சி.வி. சண்முகம் பேசும் வீடியோவைக் காணமுடிந்தது.
அதில் “தேர்தல் வருது ஓட்டு போடணும், 1000 ரூபாய் தருவாரு, பொங்கல் பரிசு தருவாரு, laptop கொடுப்பாரு, மிக்ஸி கிரைண்டர் கூட கொடுப்பாரு, ஆடு மாடு கொடுப்பாரு, விட்டா எல்லாருக்கும் ஒரு பொண்டாட்டிய கூட கொடுப்பார்” என்று சி.வி. சண்முகம் பேசியது தெளிவாக பதிவாகியுள்ளது.
இவ்வாறு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் சி.வி. சண்முகம் பேசுகையில், திமுக கொடுக்கும் இலவச பொருட்களை பெண்களுடன் ஒப்பிட்டு பேசியது உண்மை தான் என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் இலவச பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டு தாழ்வாக பேசியது உண்மைதான். ஆனால் ’அவர் அவ்வாறு பேசவில்லை, ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது’ என்று தவறான தகவலை அதிமுக IT Wing பரப்பிவருகிறது.