யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
”Sorry வேண்டாம். நீதி வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்த பதாகையில் ”Sorry கேளு” என்ற வார்த்தையை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணை என்ற பெயரில் போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி மரணமடைந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் கொட்டடி மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன. இதனை கண்டித்து தவெக தலைவர் விஜய் சென்னையில் ஜீலை 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
காவல்துறை தாக்கியதால் இறந்துபோன அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிக்கும் விதமாக ’எங்களுக்கு சாரி வேண்டாம்! நீதி வேண்டும்’ என்று தவெக சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிடித்திருந்த பதகையில் ”Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று முரண்பாடான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
● Sorry வேண்டாம்.
● நீதி வேண்டும்.
● Sorry கேளு.
😵💫😵💫😵💫😵💫😵💫 pic.twitter.com/8n1hRs9y49
உண்மை என்ன?
லாக்கப் மரணங்களுக்கு எதிராக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசும் வீடியோவைக் காணமுடிந்தது.

அதில், விஜய் கையில் வைத்திருந்த பதாகையில், ”Sorry வேண்டாம்! நீதி வேண்டும்!” என்றுதான் எழுதப்பட்டிருந்தது. மேலும், விஜய் அருகில் மேடையில் இருந்த தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையிலிருந்த பதாகையில் கூட “வெற்று விளம்பரம் வேண்டாம்! வெள்ளை அறிக்கை வேண்டும்!!” என்றுதான் எழுதப்பட்டிருந்தது. “Sorry கேளு!” என்று எந்த பதாகையிலும் எழுதப்படவில்லை.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் ‘TVK Party HQ’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதை காண்கிறோம். அதிலும், விஜய் கையிலிருந்த பதாகையில் ”Sorry வேண்டாம்! நீதி வேண்டும்!” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் கையில் வைத்திருந்த பதாகையில், ”Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று எழுதப்படவில்லை என்பது உறுதியாகிறது. இதில் ”Sorry கேளு” என்ற வார்த்தை Edit செய்து உருவாக்கப்பட்டது என்று தெளிவாகிறது.
முடிவு:
லாக்கப் மரணங்களுக்கு எதிராக தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விஜய் கையிலிருந்த பதாகையில் ”Sorry வேண்டாம். நீதி வேண்டும்” என்று எழுதிகையிலிருப்பதை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.
