யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதை திரித்து நியூஸ் கார்டிலும் சமூக வலைத்தளத்திலும் தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
பேசி பேசி expose ஆகிட்டு இருக்காங்க!

காவல்துறை அனுமதி கொடுத்த நேரம் 3:00PM to 10:00PM, எங்கள் தளபதி 7:00 அளவில் வந்தார்.
ஒரு CM ah இருந்து இப்படி பொய் சொல்லறதுக்கு....
#நீதி_வெல்லும் #DMKFailsTN

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (15.10.2025) சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து பேசினார். அதில் ’விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கரூர் நிகழ்வின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? என்பது குறித்தும்’ முதல் பேசினார்.
இவ்வாறு முதல்வர் பேசியது குறித்து செய்தி ஊடகங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டுகள் வெளியிட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு கரூர் சம்பவம் குறித்து முதல்வர் பேசிவதும் அதிகாரிகள் கூறுவதும் முன்னுப்பின் முரணான தகவல்களாக உள்ளது என்றும் முதல்வர் பொய்யான தகவல்களை பேசியதாகவும் சமூக வலைத்தளத்தில் தவெக ஆதரவாளர்கள் உட்பட சிலர் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
Claim 1: ‘கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்டபோது ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்தனர், தகரக் கொட்டகையை அகற்றி வெளியேற முயன்றனர். இதன் காரணமாக ’அசம்பாவிதத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது’ என்று முதல்வர் சொன்னதாக நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டது ’News தமிழ்’ ஊடகம்.

உண்மை:
கரூர் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதை ’The Hindu’ ஊடகம் 48 நிமிட வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. அதில் கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்தது குறித்து முதல்வர் பேசுகையில், ‘கூட்டத்தின் ஒரு பகுதி ஜெனரேட்டர் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து தகர கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதை தடுக்க ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.
‘மின்சாரம் தாக்குவதை தடுக்க ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்’ என்ற வாசகத்தை திரித்து ’அசம்பாவிதத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது’ என்று தவறாக நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது ’News தமிழ்’. பின்னர் அந்த செய்தியை ’News தமிழ்’ ஊடகம் நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி நீக்கப்பட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக கொண்டு தவறாக தகவலை பரப்பி வருகின்றனர்.
Claim 2:
கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் மின்சாரம் துண்டிக்கப்படவே இல்லை என்று சொல்கிறார். ஆனால் சட்டமன்றத்தில் முதல் விபத்தை தடுக்கவே மின்சாரம் துண்டிப்பு என்று சொல்கிறார். இப்படி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மாற்றி பேசி அவர்களே அம்பலப்பட்டு போகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை:
கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி பேசியதாக பரப்பப்படும் இந்த நியூஸ் கார்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது. அதில் அவர் ‘தவெக தலைவர் விஜய் பேசும்போது மின்தடை இல்லை; ஜெனரேட்டர் மற்றும் Focus Lights-தான் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆகியுள்ளது’ என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அதாவது, மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த பகுதியின் மின்சாரம் தடை செய்யப்படவில்லை. அதே நேரத்தில் விஜய் பிரச்சாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஜெனரேட்டர் தான் நிறுத்தப்பட்டதாக சொல்கிறார்.
அதேபோல் சட்டமன்றத்தில் முதல்வரும் ‘கூட்டத்தின் ஒரு பகுதி ஜெனரேட்டர் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து தகர கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதை தடுக்க ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார். இதில் எவ்வித முரணும் இல்லை.
விஜய் பிரச்சார நிகழ்வு நடந்த அப்பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை, மக்கள் மீது மின்சாரம் தாக்குவதை தடுப்பதற்காக ஜெனரேட்டர் மூலம் வந்த மின்சாரம் மட்டும் நிறுத்தப்பட்டதாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளரும் முதல்வரும் முரணின்றி தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
Claim 3:
கரூர் பிரச்சார பயணத்திற்காக தவெக கொடுத்த அனுமதி கடிதத்தில் நிகழ்வு நடைபெறும் நேரம் என மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் கரூர் நிகழ்ச்சிக்கு மாலை 7 மணிக்கு வந்தார். இருந்தும், அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்தது கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று முதல்வர் சட்டமன்றத்தில் பொய் சொல்கிறார் என்று தவெக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
காவல்துறை அனுமதி கொடுத்த நேரம் 3:00PM to 10:00PM, எங்கள் தளபதி 7:00 அளவில் வந்தார்.
ஒரு CM ah இருந்து இப்படி பொய் சொல்லறதுக்கு.... #நீதி_வெல்லும் #DMKFailsTN pic.twitter.com/WRKKtNT99d
உண்மை:
விஜய் தாமதமாக வந்தது குறித்து சட்டபேரவையில் முதல்வர் பேசுகையில், ’தவெக கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணிவரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்குக் கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்’ என்றே குறிப்பிடுகிறார்.
அதாவது மாலை 3 முதல் இரவு 10 மணிவரை அனுமதி கேட்டிருந்தாலும், பகல் 12 மணிக்கே விஜய் கரூர் வந்துவிடுவார் என்று தவெகவின் பொதுச் செயலாளரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் காலையிலிருந்தே மக்கள் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டனர் என்று முதல்வர் சொல்கிறார்.
இதனை திரித்து முதல்வர் உண்மையை மறைத்து பொய் கூறுவதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பிவருகிறார்கள்.
முடிவு:
கரூர் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கமளித்துப் பேசியதை திரித்து நியூஸ் கார்டிலும் சமூக வலைத்தளத்திலும் தவறாக பரப்புகிறார்கள்.