யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் உள்ளது. ஒடிசாவில் கல்லூரி விடுதி மாணவர்கள் இரு தரப்பினருக்கிடையே நடந்த இச்செயலுக்கு எந்த மதக் காரணங்களும் இல்லை.
பரவிய செய்தி
ஒரிசாவில் நடந்த சம்பவம். தீபாவளி கொண்டாடி கொண்டிருந்த ஹிந்துக்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர்.
டெர்மினேட்டர் பட பாணியில் ஹிந்துக்கள் அவனுகளை திருப்பி தாக்கினர். பார்ப்பதற்கு மிகவும் திரில்லாக இருக்கும்.

விரிவான விளக்கம்
சமீபத்தில் டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது இந்து - முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. 'அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்' அமைப்பின் ராஷ்ட்ரீய கலா மஞ்ச் (ஆா்கேஎம்) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி நிகழ்ச்சியின்போது இஸ்லாமியர்களை வம்பிழுக்கும் வகையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியதையடுத்து, அதற்கு எதிராக இஸ்லாமிய மாணவர்களும் அல்லாவைப் பற்றிய முழக்கம் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு இந்துக்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோ குறித்து ‘Odisha Tv’ தளத்தில் கடந்த 1ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், சம்பல்பூரிலுள்ள VIMSAR (Veer Surendra Sai Institute Of Medical Science And Research) கல்லூரி விடுதியில் இரு மாணவர் குழுவிற்கு மத்தியில் பட்டாசுகளைக் கொண்டு தாக்கிக்கொள்ளும் சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் எந்த ஒரு இடத்திலும் இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்கியதாகவோ இந்துக்கள் பதில் தாக்குதல் செய்ததாகவோ குறிப்பிடப்படவில்லை.

இதுபற்றி Odisha Tv, Kanak News ஆகிய ஊடகங்கள் வீடியோவுடன் செய்தியும் வெளியிட்டுள்ளது. அதில், பரவக்கூடிய வீடியோவில் உள்ள காட்சிகளைக் காணமுடிகிறது. கடந்த ஆண்டு(2023) தீபாவளியின்போதும் இதே வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இதுகுறித்துத் தேடியதில், தற்போது பரவக்கூடிய இதே வீடியோ 2018, நவம்பர் 10ஆம் தேதி ‘Future Youtuber’ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் இந்த சம்பவம் VIMSAR கல்லூரி விடுதியில் எடுக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது தீபாவளி பண்டிகையொட்டி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், தற்போது நடந்ததாக ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு மதக் காரணங்கள் புகுத்தப்பட்டு இந்து - இஸ்லாம் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்தி பரப்புகின்றனர்.
முடிவு:
தீபாவளி கொண்டாட்டத்தின்போது இந்துக்கள்மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களை இந்துக்கள் திருப்பி தாக்குவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இந்த வீடியோ 2018ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் உள்ளது. ஒடிசாவில் VIMSAR கல்லூரி விடுதி மாணவர்களின் இரு தரப்பினருக்கு மத்தியில் நடந்த இச்செயலுக்கு எந்த மதக் காரணங்களும் இல்லை.