யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக ஆட்சியிலிருந்த கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பின்னரே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை.
பரவிய செய்தி
கலைஞர் போக்குவரத்து கழகம் என்று மாற்றுவதற்கு இது ஒரு முன்னெடுப்பாக கூட இருக்கலாம்.

விரிவான விளக்கம்
’தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று இருந்ததை திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ’தமிழ்நாடு’ என்பதை நீக்கிவிட்டு, ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மாற்றியதாகவும், இவ்வாறு செய்யப்பட்டது போக்குவரத்துக் கழகத்தை ’கலைஞர் போக்குவரத்து கழகம்’ என்று மாற்றுவதற்கான முன்னெடுப்பாக கூட இருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
கலைஞர் போக்குவரத்து கழகம் என்று மாற்றுவதற்கு இது ஒரு முன்னெடுப்பாக கூட இருக்கலாம். pic.twitter.com/X5hTlQZx10
உண்மை என்ன?
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தொடர்பாக இணையத்தில் தேடியதில், ‘TNSTC Blog’ என்ற தளத்தை காணமுடிந்தது. இந்த தளத்தில் 2012ஆம் ஆண்டு இயக்கப்பட்ட புதிய ‘SETC’ பேருந்துகளைக் காணமுடிகிறது. அந்த பேருந்துகளில், ’தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதே 2012ஆம் ஆண்டில் SETC அல்லாத சாதாரண பேருந்துகளில் ’தமிழ்நாடு’ என்று பெயர் இல்லாமல் இருப்பதைக் காணமுடிகிறது.

மேலும், தேடியதில், ‘Smart Salem’ என்ற பேஸ்புக் பக்கத்தில், 2019ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்ட விரைவுப் பேருந்தின் புகைப்படத்தை காணமுடிகிறது. அதில், ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்’ என்றே எழுதப்பட்டுள்ளது. ’தமிழ்நாடு’ என்ற பெயர் அதில் இல்லை.

மேலும், ‘TNSTC-OVER VIEW’ என்ற வலைத்தளத்தில் 2014ஆம் ஆண்டு ‘TNSTC’ பேருந்து பற்றிய தகவல்களைக் காணமுடிகிறது. அதில், ‘அரசு போக்குவரத்துக் கழகம்’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை, நெல்லை, கும்பகோணம் என கோட்டம் வாரியாக பெயரிடப்பட்டுள்ளது. அதில் ’தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லை.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, கடந்த 2012ம் ஆண்டு இயக்கப்பட்ட ‘SETC’ பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயக்கப்பட்ட புதிய பேருந்துகளிலேயே ‘தமிழ்நாடு’ நீக்கப்பட்டு ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
அதேபோல், கோட்டம் வாரியாக இயக்கப்படும் TNSTC பேருந்துகளை கடந்த 2014ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலே ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காண முடிகிறது.
இதிலிருந்து, கடந்த அதிமுக ஆட்சியிலேயே அரசு விரைவு பேருந்துகளில் மற்றும் கோட்டம் வாரியான TNSTC பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
கடந்த அதிமுக ஆட்சியிலேயே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதை மறைத்து, திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளில் இருந்து ’தமிழ்நாடு’ பெயர் நீக்கப்பட்டுள்ளதாகப் திரித்து தவறாக பரப்பி வருகின்றனர்.