யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீருடை அணிந்த காவலர் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடந்ததாகப் பரவும் இந்த வீடியோ ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
திராவிட அரசால் தமிழகம் அழிந்து கொண்டு உள்ளது. காவலர்கள் என்றால் ஒரு பயம் இருக்க வேண்டும். இப்படி கண்ட நாயெல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்தால் தமிழ்நாடு கொலைகளமாக மாறியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. காவல்துறை தலை நிமிர வேண்டும்.

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மாலை மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் குறிப்பாக தலைநகர் சென்னையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகக் கூறி அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் நின்றுக்கொண்டிருக்கும் காவலரை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைவது போன்ற 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், “காவலர்கள் என்றால் ஒரு பயம் இருக்க வேண்டும். இப்படி கண்டவர்கள் எல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்ததால்தான் தமிழ்நாடு தற்போது கொலைக்களமாக மாறியுள்ளது. காவல்துறை தலைநிமிர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
🙄🙄🙄 போலீஸ்னா ஒரு பயம் இருக்கணும். இப்படி கண்ட நாயெல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்தவர் அதிகரித்த காரணத்தால்தான் இன்று தமிழ்நாடு கொலைகளமாக மாறியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. pic.twitter.com/eTsLuHwxfK
— Sindhu Appu (@SindhuAppu35224) July 9, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறியமுடிந்தது.
Oneindia பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோவைக் குறிப்பிட்டு கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று “கேமராவில் சிக்கியது: பொதுமக்கள் பார்வையில் காவலரை அறைந்த சென்னை நபர்" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் “சென்னை காவலரை கல்லூரி மாணவர் ஒருவர் அறைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மணிகண்டன் என்ற அந்த மாணவர், போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தப்பட்ட பின்னர், பொதுமக்கள் மத்தியில் காவலரைத் தாக்குவதைக் காணலாம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோன்று, 'MIRROR NOW' யூடியூப் பக்கத்திலும், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2017ஆம் ஆண்டிலேயே “சென்னை: இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை பிடித்த காவலரை மாணவர்கள் அறைந்தனர்“ என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இதன்மூலம் 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் காவலருக்கு நடந்த சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்த அண்ணாமலை எனப் பரவும் பழைய வீடியோ!
மேலும் படிக்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாகப் பரவும் பழைய வீடியோ
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் காவலரை பொதுமக்கள் மத்தியில் அறைந்த இளைஞர் எனக் கூறி பரவும் வீடியோ 2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறியமுடிகிறது.